அரசியல் தலைவர்களே ஏன் இந்த போராட்டங்கள் வெடிக்கவில்லை?

 

அரசியல் கைதிகள் நவம்பர் 7 ம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ்தேசியகூட்டமைப்பு போராட்டத்தை ஆரம்பிக்கும் என்று சுமந்திரன் 2015ம் ஆண்டு கூறினார். கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. ஆண்டு 2017 ஆகிவிட்டது. என் இன்னும் சுமந்திரன் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை?

உறுதியளித்தபடி அரசு தீர்வு காணாவிட்டால் மீண்டும் இளைஞர் போராட்டம் வெடிக்கும் என்று பாராளுமன்ற பிரதிகுழு தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். அரசு இன்னும் தீர்வு காணவில்லை. எனவே ஏன் இன்னும் செல்வம் அடைகலநாதன் கூறிய இளைஞர் போராட்டம் வெடிக்கவில்லை?

இனி போராட்டம்தான் வேறு வழியில்லை என்று சரவணபவன் எம்.பி 2015ல் வட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். அவர் தன் மகளின் பிறந்தநாளுக்கு ஜனாதிபதியை வரவழைத்து கேக் வெட்டியதை தவிர வேறு என்ன போராட்டத்தை செய்துள்ளார்?

ஏமாற்ற கொழும்பு முயன்றால் அரசை முடக்கும் போராட்டம் வெடிக்கும் என்று டிசெம்பர் 28 மாவை சேனாதிராசா முழங்கினார். அவர் இவ்வாறு பலதடவை போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை ஒருபோராட்டம்கூட அவரால் ஏன் வெடிக்கவில்லை?

ஆனால்,

காணாமல் போனவர்களின் உறவுகள் போராடுகிறார்கள்

கேப்பாப்பிலவு மக்கள் தமது நிலம் கேட்டு போராடுகிறார்கள்

பன்னங்கட்டி மக்கள் தமது நிலம் கேட்டு போராடுகின்றார்கள்.

இரணதீவு மகக்ள மீள் குடியேற்றுமாறு கோரி போராடுகிறார்கள்

வேலையற்ற பட்டதாரிகள் வேலை கேட்டு போராடுகிறார்கள்

இவ்வாறு தமிழ் மகக்ள தாங்களாகவே தமக்காக போராடி வருகிறார்கள். ஆனால் மக்களுக்காக போராட வேண்டிய தலைவர்களோ போராட்டம் வெடிக்கும் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தலைவர்கள் தமிழ் மக்களுக்காக போராட்டம் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. போராடும் அந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தையாவது கூறியிருக்கலாம்.

ஆனால் இவர்களோ தம்மை சந்திக்க வந்தவர்களிடம் பேப்பர் படித்துக்கொண்டு “என்னடம் திறப்பு இல்லை” என்று திமிராக பதில் சொல்கிறார்கள். காணாமல் போனவர்கள் உயிருடன் இருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பொறுப்பற்ற முறையில் கூறுகிறார்கள்.

அதைவிட, போராட்டம் செய்து நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று வேறு போராடும் மக்களிடம் புத்திமதி கூறுகின்றனர்.

காணியைப் பெற்றவர்களே வடக்கில் போராடுவதாக ஜனாதிபதி மைத்திரி பொய் கூறுகிறார். ஜனாதிபதி கூறுவது தவறு என்று ஆதாரங்களுடன் மறுத்துரைக்க வேண்டிய நம் தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர்.

ஒரு தலைவர் பிரதமரைக்கூட்டிச் சென்று குடத்தனையில் நுங்கு வெட்டிக் கொடுக்கிறார். இன்னொரு தலைவர் ஜனாதிபதியை அழைத்தச் சென்று மகளுக்கு பிறந்தநாள் கேக் வெட்டுகிறார்.

மக்களின் வாக்கு பெற்று பதவியை பெற்ற நம் தலைவர்கள் மக்களின் நலனை கவனிப்பதில்லை. சொகுசு வாகனம், சொகுசு பங்களா என தமது நலனையே கவனிக்கின்றனர்.

இது நியாயமா?

Allgemein