வடக்கை மாற்றியமைக்க புலம்பெயர் சமூகம் முன்வரவேண்டும் :வடக்கு முதல்வர்

”வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் வடக்கு மாகாணத்தை மாற்றியமைக்க முன்வர வேண்டும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தகாலமாக அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் பேராசிரியர் கலாநிதி குணசிங்கத்தின் உதவியில் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட இறந்தோரை நினைவுகூரும் நினைவு கட்டிமொன்றை திறந்து வைத்து, முதியோர் இல்லத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்து உரையாற்றிய முதலமைச்சர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். முதலமைச்சர் தமது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

”வயோதிப இல்லங்கள் இன்று பல இடங்களில் புதிது புதிதாக தோற்றம் பெற்று வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பலர் தமது தாய் தந்தையர் முறையான பராமரிப்பின்றி வீட்டில் அல்லற்படுவதை அவதானித்து அவர்களைத் தாம் வாழுகின்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையிலும் அந் நாடுகளில் காணப்படுகின்ற சீதோஷண நிலைகள் இவர்களுக்கு ஒத்துவராது என்பதாலும் வேறு வழியின்றி தமது உணர்வுகளை கல்லாக்கிக் கொண்டு முதியோர் இல்லங்களில் பெற்றோரை இணைத்துவிட்டு கனத்த மனத்துடன் தமது நாட்டிற்கு திரும்புவதை நாம் அவதானித்திருக்கின்றோம்.

குழந்தைகள் போன்று வயோதிபர்களும் பராமரிக்கப்பட வேண்டும். நித்தமும் வெளியில் சென்று பல வேலைகளுக்கிடையே நாட்டு நடப்புக்கள், செய்திகள் என அறிந்து வந்தவர்கள் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கும் போது அவர்களுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு உறவு தேவை. ஆனால் எமக்கோ அவர்களுடன் பொழுதைக் கழிக்க நேரமில்லை. இந்த நிலையில் அவர்களும் துக்கப்படுகின்றார்கள். நாமும் மனச்சுமையுடன் சஞ்சலப்பட வேண்டியுள்ளது.

எனவேதான் இன்றைய நிலையில் வயோதிபர்கள் பலர் தாமாகவே வயோதிப இல்லங்களில் வாழ விரும்புகின்றார்கள். சில சமயங்களில் வயோதிப இல்லங்களில் போதுமான வசதிகள் காணப்படாத போதும் தமது பிள்ளைகள் படுகின்ற அல்லல்களைச் சகிக்க முடியாது அதே நேரம் தமது இயலாமையையும் கருத்தில் கொண்டு இல்லங்களிலேயே அவர்கள் இருந்துவிடத் தீர்மானித்து விடுகின்றார்கள். எனினும் இல்லங்கள் சர்வதேச தரத்திற்கொப்பானதாக அமைகின்ற போது அவர்களின் வாழ்க்கைத்தரம் சுகமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும் என்று எதிர்பார்க்கலாம். இல்லை என்றால் அவர்கள் பல கஷ்டங்களின் மத்தியில் வாழ நேரிடும்.

கலாநிதி குணசிங்கம் போன்ற கொடையாளிகள், அதே நேரம் அரசும் இவ்வாறான முதியவர்களுக்கு வேண்டிய வைத்திய உதவிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்” என்றார்.

Allgemein