தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த 12 இளைஞர்கள் கைது

சென்னை – மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மெரினா கடற்கரையில் இடம்பெறும் எனவும் அதற்கு அனைவரும் வரவேண்டும் என்றும் மே 17 இயக்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு பொதுமக்கள் வருகைதருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அனுமதியின்றி மெரினாவில் கூடினால் கைது செய்வோம் என இந்திய பொலிஸார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் மக்களின் வருகையை தடுப்பதற்கு அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போதே, மெரினா கடற்கரையில் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டை மற்றும் கறுப்பு நிற சட்டைகளை அணிந்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது வரை 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தேடி, அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Allgemein