ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது பெண்கள் பாடசாலையின் ‚பவள விழா‘ நிகழ்வு.

சிறப்போடு நிறைவேறிய ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது பெண்கள் பாடசாலையின் ‚பவள விழா‘ நிகழ்வு.

ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் 1942ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட, முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டிய ‚பவள விழா‘ நிகழ்வானது 22.05.2017 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு பாடசாலையின் விசேட ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி ஏ.எம்.ஜே நீற்றா தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை யோ.புரட்சி தொகுத்து வழங்கினார்.

முன்னதாக வடிவமைக்கப்பட்ட பாடசாலைக் கொடிகளுடன் மாணவர்களின் அணிவகுப்பு ஆரம்பமானது. நிகழ்ச்சியை பாடசாலை வரலாற்றில் ‚முதற்தர மாணவி‘ எனும் பெருமைக்குரிய அருட்சகோதரி அக்குவைனஸ் சிறில் ஆரம்பித்து வைத்தார். வீதியின் இரு மருங்கிலும் மாணவர்கள் கொடி அசைக்க அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். கொடியேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து, விருந்தினர்கள் ஆராத்தி எடுத்து பொட்டிட்டு வரவேற்கப்பட்டார்கள். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இறைவணக்கத்தினை தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை பாடசாலை ஆசிரியர் திருமதி வி.சோமசேகரம் வழங்கினார். தலைமையுரையினை பாடசாலை முதல்வர் அருட்சகோதரி ஏ.எம்.ஜே நீற்றா நிகழ்த்தினார். தொடர்ந்து நடனங்கள்(குழு நடனம், ஆங்கிலப்பாடல் அபிநயம், சுனாமி நினைவு நடனம்), பேச்சு(செ.மிலோஜினி), கவிதை(சா.ஜெபதக்சிகா), தனிப்பாடல்(சா.டிலானி) என்பன இடம்பெற்றன. சிறப்புரையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பாடசாலையின் பழைய மாணவருமாகிய வைத்திய கலாநிதி சிவமோகன் ஆற்றினார். கெளரவ விருந்தினர் உரையினை பாடசாலையின் பழைய மாணவரும், யாழ் மறை மாவட்ட நிதிப்பொறுப்பாளருமான அருட்பணி எஸ்.நேசநாயகம் அடிகளார் ஆற்றினார்.

தொடர்ந்து பவள விழாவினை முன்னிட்டு ‚அருட்கரம்‘ எனும் பவள விழா மலர் அறிமுகம் செய்யப்பட்டது. நூலின் அறிமுக மற்றும் வெளியீட்டுரையினை ஈழத்தின் பெயர் சொல்லத்தக்க படைப்பாளிகளுள் ஒருவரான ‚மணலாறு விஜயன்‘ என அறியப்பட்ட, கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் விஜயரட்ணம் ஆற்றினார். மலரினை பாடசாலை முதல்வர் வெளியிட முதற்பிரதியினை நிகழ்வின் பிரதம விருந்தினர் திருக்குடும்ப சபையின் (யாழ்ப்பாணம்) மாகாண ஆலோசகர் அருட்சகோதரி அருள் மத்தேசுப்பிள்ளை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பவள விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. பரிசில்களை வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், அருட்பணி அன்ரன் புனிதகுமார் அடிகளார், அருட்பணி எஸ்.நேசநாயகம் அடிகளார் , அருட்சகோதரி அருள் மத்தேசுப்பிள்ளை ஆகியோர் வழங்கி வைத்தனர். ஆசிரியர்கள் சுதர்சினி, இ.உதயந்தன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

தொடர்ந்து பாடசாலை வரலாற்றில் ‚முதற்தர மாணவி‘ எனும் பெருமைக்குரிய அருட்சகோதரி அக்குவைனஸ் சிறில் அவர்களுக்கு ஆசிரியை திருமதி ஹெலன் விமலேஸ்வரன் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு செய்தார். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவி லோஜினா கமலேஸ்வரன் அவர்களுக்கான நினைவுப் பரிசிலினை பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ரெஜிஸ் வழங்கி வைத்தார். பாடசாலைச் சமூகம் சார்பாக பாடசாலை முதல்வர் அருட்சகோதரி நீற்றா கெளரவிக்கப்பட்டார். இக்கெளரவிப்பினை ஓய்வுபெற்ற அதிபர் திருமதி மரிசுனா அமிர்தநாயகம், அருட்சகோதரி அக்குவைனஸ் சிறில் அகியோர் அளித்தனர்.

தொடர்ந்து அறிவிருட்சம் துரித கல்வி மேம்பாட்டு நிறுவனம் சார்பான நினைவுப் பரிசில் மற்றும் பாடசாலைக்கான நூல்கள் அன்பளிப்ப என்பன இடம்பெற்றது. நிறுவனத்தின் இயக்குநர் ஐ.எம் சுரைஸ் மற்றும் ஆசிரியையும் பெண் எழுத்தாளருமான முல்லை றிசானா ஆகியோர் இவற்றை பாடசாலை முதல்வரிடம் வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையினை அருட்சகோதரி அருள் மத்தேசுப்பிள்ளை ஆற்றினார். நன்றியுரையினை பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.தமிழ்ச்செல்வன் வழங்கினார். நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

இப்பாடசாலையானது 2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலையில் சிக்குண்டது. அவ்வனர்த்தத்தில் சிக்கி இங்கு கல்வி கற்ற 200 மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

போரினாலும் இயற்கை அழிவுகளினாலும் பாதிப்புற்றபோதும் சவால்கள் கடந்து முன்னேறிய இப்பாடசாலையின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா நிறைந்த அரங்கில் நன்றே நடந்தேறியது.

Merken

Merken

Merken

Allgemein