மன்னார் வந்த ரணிலுக்கு கறுப்பு கொடி எதிர்ப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேற்றைய மன்னார் விஜயத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு கொடி அசைத்து தமது எதிர்ப்பு போராட்டத்தை அங்கு மேற்கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்ட செயலக புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்துக்கு சென்றிருந்தார்.  அவர் காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு சென்றவேளை நிறுவப்பட்டிருந்த  பாரிய பாதுகாப்புக்களையும் மீறி காணாமல் போனவர்களுடைய உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னாரில் நேற்றைய தினம் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது என அறிந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் அதற்கு அரச அதிபர் அனுமதி வழங்காத காரணத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்றைய தினம் மன்னார் மாவட்ட செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நிகழ்வினை ஆரம்பிப்பதற்கு தேசிய கொடியினை பிரதமர் ஏற்றிய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடி யினை அசைத்தவாறு கோஷம் எழுப்பியிருந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளை உள்ளே அழைத்து பிரதமர் ரணிலினுடைய பிரதிநிதி ஒருவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலர், அமைச்சர்  றிஸாட் பதியுதீன், ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடைய உறவுகளின் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகள் உள்ளட ங்கிய மகஜரினை கையளித்துள்ளனர்.
Allgemein