புலிகள் மீள உருவாகமாட்டார்கள் என்று கூறமுடியாது! கோத்தபாய

கொடிய பயங்கரவாதிகளான புலிகளை எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாது ஒழித்தோம். அத்தினத்தை இன்று கொண்டாடுகின்றோம் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசம் என்ற வகையில் கடந்த கால இருண்ட சூழ்நிலையை மீள உருவாக்க இடமளிக்கப்படக் கூடாது. எனினும் தற்காலத்து பிரிவினைவாதம் பல்வேறு வழிகளில் தலைதூக்கக் கூடும்.

உயிர்த்தியாகத்துடன் நிலைநாட்டப்பட்ட தாய் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடப்படாகும். தேசியப் பாதுகாப்பிற்கு எதிரான விடயங்களுக்கு அதி உச்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

உலகின் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இல்லாதொழிக்கப்பட்டது. அதனையே கொண்டாடுகிறோம்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கக்கூடிய சாத்தியம் கிடையாது என மறுதலித்துவிட முடியாது.

நாட்டு மக்கள் என்ற ரீதியில் நாம் படைவீரர்களுக்கு நன்றிக்கடன் உடையவர்கள் என்றும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Allgemein