ஓர் தேசிய இனத்தின் விடுதலைக் கனவு !

மே 16 ,17,18 தேதிகள் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாதவை. ஈழத்தில் நடந்த இனப்படுகொலை என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம். தமிழகத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் மட்டுமே இருந்தும் நம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லை!

சுதந்திரத்திற்கு முன்பு,  ஆங்கிலேயர்களை எதிர்த்து சிங்களவர்களோடு இணைந்து தமிழர்களும் வலுவாக விடுதலைக்காக போராடியிருந்தனர். சொல்லப் போனால் ‘சிங்களவர் “களை விட தமிழர்களை சமாளிப்பது பெரிய காரியமாகிப் போனது இங்கிலாந்துக்கு!

இந்நிலையில், தமிழர், சிங்களர் ஆகிய இரு இனக்குழுவுக்கு இடையிலும் வேற்றுமையை உருவாக்கினால் மட்டுமே இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தன்னால் வாணிபம் செய்ய முடியும் என்பதை இங்கிலாந்து உணர்ந்திருந்தது.

எனவே சிங்களர்களே அதுவரை பெரிதும்  அறிந்திடாத பாலி மொழியில் இருந்த ‘மஹா வம்சம் ‘ என்ற புத்தமத நூலை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து கொடுத்தனர். அதில் ஆங்காங்கே இன துவேசங்களையும் விதைத்து விட்டிருந்தனர்!

இது ஒருபுறம் பௌத்த மத குருமார்களிடமும், சிங்களர்களிடமும் விசத்தை விதைத்துக் கொண்டிருக்க, 1944-ல் லார்ட்.சோல் பெர்ரி என்பவரின் தலைமையில் ஓர் கமிஷனை இங்கிலாந்து  நியமித்தது. இலங்கைக்கான அரசியலமைப்பை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் அது.

அப்போது தமிழர்கள் முன்வைத்த கோரிக்கை, 50% அரசியல் மற்றும் இட ஒதுக்கீடு உரிமை சிங்களர்களுக்கும், மீதமுள்ள 50% உரிமை பூர்வக்குடி தமிழர்கள், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு என்பது!  இதை பிரிட்டன் முற்றிலுமாக நிராகரிப்பு செய்தது. இதுதான் தமிழர்களின் மீதான அடக்குமுறைக்கு பெரிதும் வசதியாகிப்போனது இனதுவேசர்களுக்கு. தமிழர்களின் மீது சிங்களர்களுக்கு வஞ்சத்தை விதைத்ததில் இங்கிலாந்தின் பங்கு பெரியது!

இதற்கிடையில், 1950-களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளி விவகாரத்துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது.

“உலகின் 70% வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது. அதில் 45% வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித்தடத்தில் இருப்பது  மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. எனவே இதன் அருகில் இருக்கும் திரிகோணமலை உள்ளிட்ட கடற்பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் வாய்ப்புள்ளது. அச்சமயம்  இப்பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!”

– இதுதான் அந்த அறிக்கை!

இதை மனதில் கொண்டே அமெரிக்கா தனது காய்களை நகர்த்த தொடங்கி இருந்தது. ஆனால், பெரிதாக எதுவும் நிகழவில்லை. இதனால்தான், இலங்கை பேரினவாத அரசு தமிழர்கள் மீது ஒவ்வொரு முறை அடக்குமுறையை தொடுக்கும் போதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தின.

மாறாக, இறுதியில் அவர்களும் இலங்கை இராணுவத்துக்கு கொத்து குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும், ராடார்களையும், செயற்கைக்கோள் உதவிகளையும் வழங்கி மக்கள் அழித்தொழிக்கப்படுவதை பார்த்து ரசித்தனர்.

முதல் முப்பது ஆண்டுகள் அகிம்சை வழியில் போராடிய தமிழர்களை, இலங்கை அரசு அடக்குமுறையையும், ஆயுதத்தையும் கொண்டு ஒடுக்கியது. பின்னர் அதே வழியில் தமிழர்களையும் ஆயுதம் ஏந்தி போராட வைத்தது.

அதுவரை அடி வாங்கிக் கொண்டிருந்தவர்கள், திருப்பி அடித்தபோது “தீவிரவாதிகள் ” என பட்டம் சூட்டப்பட்டனர்!

1954 – தமிழர்கள் பேரணியில் கலவரம் .

1956 & 58 – தமிழர்களின் வீடுகளை தீக்கிரையாக்கியது மற்றும் குழந்தைகளை நெருப்பில் தூக்கி போட்டது!

1983-ல் மறக்க முடியாத கருப்பு ஜூலை படுகொலை போன்றவற்றை விடுதலை புலிகளை குற்றம் சொல்பர்கள் வசதியா மறந்து விடுவார்கள்!

LTTE நினைத்திருந்தால் திரிகோணமலையை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்து தங்களின் விருப்பப்படி வசதியாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், அது பின்னாளில் நம் தொப்புள் கொடி உறவுகளான இந்தியாவையும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்திரா காந்தியும் புலிகளை ஏன் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை ராஜதந்திரமாக உணர்ந்திருந்தார்!

உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் உடை, உணவு மற்றும் உறைவிடம் அத்தியாவசியம். அதைப் போலவே அவனுக்கென மொழி, கலாச்சாரம், வாழ்வியல் முறை ஆகியவற்றை தானாக தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் கூறுகிறது. இம்மூன்றின் ஒட்டுமொத்த வடிவம் தான் ‘இறையாண்மை ‘!

தனக்கென ஓர் தனித்த இறையாண்மையை வார்த்தெடுக்கும் எந்த இனக்குழுவுக்கும் தனி நாட்டினை பெறும் தகுதியுள்ளது! இதன் அடிப்படையில் தனித் தமிழீழம் கேட்ட மக்களை தான் உலக நாடுகள் ஒன்றிணைந்து கொன்றொழித்தது.

தனக்கான நாட்டினை கேட்டவர்களை ஏன் கொல்ல வேண்டும் என நாளை நம் பிள்ளைகள் நம்மை கேள்வி கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போகிறோம்!?

தமிழர்கள் தனி அரசாங்கத்தை நடத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.

2000 – 2004 வரை தனித் தமிழீழம் அமைத்து பள்ளி, கல்லூரி என கல்வி அமைப்புகளும், வங்கி, தபால் நிலையம், காவல்துறை, நீதிமன்றம், மருத்துவமனை, சிறார் இல்லங்கள் என சிறப்பான தனி சுயாட்சியை நடத்தி வந்தனர்! இன்னும் சொல்லப் போனால், குடிநீர் விநியோகம் (Drinking water Distribution) ஆஸ்திரேலியாவுக்கு இணையாக இருந்ததாக அரசியல் விமர்சகர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

இத்தனை அழகான நாட்டை உலகமே சேர்ந்து சிதைத்து அழித்தது ‘வணிக’ நோக்கத்திற்காகவும், ஈழ நாட்டில் உள்ள கனிம வளங்களை திருடவுமே. நீங்கள், உங்கள் Mobile-ல் இருக்கும் Map-ஐ திறந்து தெற்காசிய கடற்கரை ஓர நாடுகளை ஓர் முறை நோட்டமிடுங்கள். வட கொரியா, வியட்நாம் தொடங்கி பிலிப்பைன்ஸ் (CIA-வால் உருவாக்கப்பட்ட அபு சயிஃப்), ஈழம், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன், சோமாலியா என வல்லாதிக்க நாடுகளின் ஆதிக்கத்தை வணிக ரீதியாக உணரலாம்.

2009ம் ஆண்டு மே 17ம் தேதி புலிகள் ஆயுதத்தை மௌனித்து சரணடைந்த பிறகும், மே 17 இரவும், அதற்கு மறுநாள் மே 18 அன்றும், நிராயித பாணிகளாக நின்றிருந்த அப்பாவித் தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்றுக்குவித்தது.

ஒருவருக்கு மேற்பட்டவர்கள், ஒரே வாழ்வியல், ஒரே மொழிபேசுபவர்கள் என்ற அடிப்படையில் கொல்லப்பட்டால் அதனை “இனப்படுகொலை” என்று சர்வதேச சட்டங்கள் வரையறுக்கின்றன. சதாம் உசேனை, அமெரிக்கா தூக்கிலிடும் போது 147 குர்தீஸ் இன மக்களை கொன்றார் என்றும், அது ‘இனப்படுகொலை’ என்றும் தீர்ப்பு வழங்கினர்.

147 பேர் கொல்லப்பட்டது இனப்படுகொலை எனில், 1.47 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதை எப்படி அழைக்க வேண்டும்???

Merken