நெல்லும் உயிரல்ல
நீரும் உயிரல்ல
முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை
கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன்
மன்னாதி மன்னன் என
மார் தட்டிக் கொள்கின்றான்
எண்ணிக்கை யாருக்கு வேண்டும்?
மொழியால் அமைந்த நிலம்
எனச்
சங்கத் தமிழோடும்
செம்மொழியின் வனப்போடும்
புதைகுழிக்குள் போனவர்கள்
நாங்களன்றோ?
குழந்தைகளின் மென்கரத்தை
அரிந்து
நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து
தாலாட்டுப் பாடி
கால்கள் வருடி
தலைமயிருக்கு நிறம் தீட்டி
அவன் பேழ் வயிறை வழிபட்ட
அப்பாலும் அடி சார்ந்தார்
இப்பாலும் இருப்போர்கள்
முப்பத்து முக்கோடி படையினர்கள்
எல்லோரும்
பட்டழிவதன்றி
வேறென்ன கேட்கும் என் கவிதை?
-சேரன்