இராஜதந்திர நெருக்குதல் : சீன நீர்மூழ்கிக்கு இலங்கை மறுப்பு

சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தரித்துச் செல்வதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் அதனை நிராகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் – கராச்சி துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் தரிப்பதற்கான அனுமதியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.

சற்றும் எதிர்பாராத வகையில் இலங்கை அனுமதி மறுத்துள்ள நிலையில் சீனா குழப்பம் அடைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான நெருக்கடிகளால் தென்னிலங்கை கடற்பரப்பில் சீன திட்டங்களுக்கு சவால்கள் ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேக பார்வையை பிரதிப்பளிக்க தொடங்கியுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் சீனாவின் எந்தவொரு நீர்மூழ்கிக் கப்பல் அனுமதிக்கப்பட்டாலும் அதனை இந்தியா ஏற்றக் கொள்ளாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சீன ஆதரவு நகர்வுகள் மற்றும் சீன நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்குள் அனுமதித்தமை தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அப்போதைய  பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் இலங்கை – இந்திய உறவுகளில் நெருக்கடியான நிலைமைகளும் உருவாகின.

1987ல் இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் சீன நீர்மூழ்கிக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டமை ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே இந்தியா கூறுகின்றது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட இலங்கையின் ஏனைய துறைமுகங்களை உலக நாடுகள் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்பதே 1987 மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் முக்கிய கருப்பொருளாகும்.

தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவற்றுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் இரு நாடுகளும் ஈடுபடக்கூடாது எனவும் அந்த ஒப்பந்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தெற்காசிய கடல் பரப்பு மீதான இந்தியாவின் அதீத நம்பிக்கைக்கு சவால் விடும் வகையிலேயே மஹிந்த ராஜபக்ஷ அன்று சீன நீர்மூழ்கி கப்பலை அனுமதித்திருந்தார்.

வலய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்று  சீனா புதிய பட்டுப்பாதை திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் 10 நட்பு நாடுகளில் சீன கடற்படை தளங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனை ஆரோக்கியமான நகர்வாக இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் கருத வில்லை. அதே போன்று சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்குள் அனுமதித்து விட கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாகவே உள்ளது.

சீனாவில்  “ஒரே பிராந்தியம் ஒரே பாதை” என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு சென்றுள்ளார். 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ள இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் சீன பட்டுப்பாதை திட்டம் குறித்து பேசப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein