விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் இன் இறுதி நொடிகள்!

கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் இறுதி யுத்தகாலத்தில், தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஸ்.

கடந்த 2009 மே 18 ஆம் நாள் அதிகாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இளநிலை தளபதிகள் இருவர் தமது இறுதிநேர தொலைபேசி அழைப்புக்களை எடுத்திருந்தனர். அந்த அழைப்பின் முடிவில் அவர்கள் கூறியது இது தான். “எமக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள், அதேபோலவே போராட்டத்தை தொடருங்கள்” “நாம் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவ திட்டமிட்டுள்ளோம்” “புலிகளின் தாயகம் தமிழீழ தாயகம்” இந்த வசனங்களுக்கு பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இன்று வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை, எனவே அவர்கள் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவியிருக்கலாம். இதனை ஏன் இங்கு தெரிவிக்கிறேன் என்றால், அதேபோல தன்னிடம் இருந்த சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர் ரமேஸ் இற்கு பத்து நொடிகள் போதுமானது.

எனினும் தலைமையின் கட்டளையை அவர் மீறவில்லை, காயமடைந்த பெருமளவான போராளிகளை சரணடைய வைத்து, அவர்களின் பாதுகாப்பை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் அமைப்புக்கள் மூலம் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருக்கு உதவியாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு பா நடேசனும், சமாதானச் செயலாகப் பணிப்பாளர் திரு சி புலித்தேவனும் அனுப்பப்பட்டிருந்தனர்.

காயமடைந்த போராளிகளுக்கு பொறுப்பாக சென்றவர்களும், காயமடைந்த போராளிகளும், சரணடைந்த ஏனைய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டால் அதனை போர்க்குற்றமாக கொண்டுவரும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிக்கப்பட்டது, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் கவனத்திற்கும் சரணடையும் நிகழ்வுகள் கொண்டுவரப்பட்டன.

ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னாவிடமும் அது தெரிவிக்கப்பட்டு, பசில் ராஜபக்சா ஊடாக சரணடையும் நடைமுறைகள் கேட்டறியப்பட்டன. தமிழ்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரணடையும் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. கொழும்பில் உள்ள வெளிநாடுகளின், குறிப்பாக மேற்குலகத்தின் தூதரகங்களுக்கும் அவை தெரியப்படுத்தப்பட்டன. பிரித்தானியாவில் உள்ள த ரைம்ஸ் நாளேட்டின் ஊடகவிலாளருக்கும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் வழங்கப்பட்டன.

அதன்பின்னர் தான் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளும், காயமடைந்த போராளிகளும் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர், திரு பா நடேசனும், அவரின் மனைவியும், சி. புலித்தேவனும் சரணடையும்போதே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார். சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா இந்த படுகொலைகளை தலைமை தாங்கி மேற்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் பகுதியை சுற்றிவளைத்து நின்ற, 53 ஆவது படையணி, 59 ஆவது படையணி, 55 ஆவது படையணி, நடவடிக்கை படையணி எட்டு உட்பட பல சிறப்பு படையணி பிரிவுகளும் தம்மிடம் நாற்புறமும் சரணடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் கோரமாக படுகொலை செய்தனர். நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப்போர் எனவும், அதில் 50,000 இற்கு மேற்பட்ட மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப்புலிகள் முன்னரே எதிர்வுகூறியிருந்தனர்.

ஆனால் அவர்களின் கணிப்புக்கள் இது தான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை. எனினும் தமது கணிப்புக்களை உறுதிப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையாக வெளி உலகிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளையே முதன்மைப்படுத்தியிருந்தனர். சிறீலங்கா அரசிடம் சரணடைபவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதை தனது மரணத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பிரிகேடியர்; ரமேஸ். அவரின் தியாகமும் திலீபனின் தியாகத்தை போன்றதே.

ஆனால் தனக்கு மிகவும் அவமானமானதும், கோரமானதுமான மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்தும், என்ன நோக்கத்திற்காக பிரிகேடியர் ரமேஸ் சரணடைந்து வீரமரணத்தை தழுவினார்.
வீரவணக்கம்

கேணல் ரமேஷ் அவர்களின் பழைய காணொளிப் பதிவு

Allgemein