பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகத்தை விஸ்தரிப்பு செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றம்!!
யாழ்.பலாலி விமான நிலையத்திற்காக மேலதிக காணிகளை சுவீகரிக்காமல் அதனை பிராந்திய விமான நிலையமாக புனரமைப்பு செய்யவும், யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை பாரியளவில் விஸ்தரிப்பு செய்யவும் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 92வது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது மாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்படி பிரேரணையை பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக சபைக்கு முன்மொழிந்தார்.
பிரேரணையை முன்மொழிந்து அவை தலைவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாண சபையின் 6வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட 71வது தீர்மானத்தின்படி பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை புனரமைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கமைய பலாலி விமான நிலையத்தை மேலதிக காணி சுவீகரிப்பு எதுவும் இல்லாமல் ஒரு பிராந்திய விமான நிலையமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதேபோல் காங்கேசன்துறை துறைமுகத்தையும் பாரியளவில் புனரமைப்பு செய்யவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் நியாயமாக எடுக்கவேண்டும் என அவை தலைவர் கூறினார்.
இந்நிலையில் குறித்த பிரேரணை சபையில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.