காலி கோட்டையை முற்றுகையிட்டுள்ள வெளிநாட்டவர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையிலுள்ள கட்டடங்களில் நூற்றுக்கு மேற்பட்டவை வெளிநாட்டவர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3000 பேர் வசித்த கோட்டையில் தற்போது 1500 பேராக குறைவடைந்துள்ளதாக காலி மரபுரிமை மன்றம் தெரிவித்துள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் நடத்தி செல்லப்படுகின்ற 37 கட்டடங்கள் உட்பட சுமார் 450 கட்டடங்கள் கோட்டையில் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் அதிக கட்டடங்கள் வெளிநாட்டவர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டடங்கள் டச்சு மற்றும் ஆங்கில யுகங்களுக்கு சொந்தமான தொல்பொருள் மதிப்பு மிக்க கட்டடங்களாகும்.

தற்போது நீதிமன்ற தொகுதி, பிரபல பாடசாலைகள் இரண்டு, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம், தொல்பொருள் அலுவலம், வீதி அபிவிருத்தி அலுவலகம், தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொறியியலாளர் அலுவலகம், தேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகார சபை, மோட்டார் வாகன பரிசோதனை அலுவலகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வங்கி உட்பட 37 அரசாங்க நிறுவனங்கள் காலி கோட்டையில் உள்ளன. அதனை கோட்டையில் இருந்து நீக்குவதற்காக மாற்று இடங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

காலி கோட்டை கட்டடங்கள் பல கோடி கணக்கில் விற்பனையாகின்ற நிலையில், தற்போது வெளிநாட்டவர்கள் கொள்வனவு செய்துள்ள கட்டடங்கள் பழுது பார்த்து சுற்றுலா துறை தொடர்பிலான வர்த்தகங்கள் நடத்தி செல்லப்படுவதாக காலி மரபுரிமை மன்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Allgemein