இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் உடன்பாடு எட்டப்படவில்லை:

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான பாலமொன்றை அமைப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைய இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பானதென சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், இந்தியாவுடனான அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இறுதி செய்யப்பட வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்திய வீதிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியுடனான கலந்துரையாடலின் போது, இரு நாடுகளை இணைக்கும் அனுமான் பால அமைப்பு தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாகவும், வடக்கிற்கான நெடுஞ்சாலை அமைப்பின் பின்னர் அதுகுறித்து பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பல திட்டங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே பல சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமரின் அண்மைய இந்திய விஜயம் தொடர்பாக கூட்டு எதிரணியினர் கேள்விகளை தொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Allgemein