மறக்கத்தகுமோ…? 28.04.2017

இன்றைய நாள் தமிழீழ வரலாற்றில் புது வரலாறு எழுதப்பட்ட உன்னதமான நாள். சாவையும் வலியையும் கண்டு தவித்து கொண்டிருந்த தமிழீழத்திற்கு புத்துணர்வு தந்த நாள்.

1995 சித்திரை திங்கள். யாழ்க்குடாநாட்டை முற்றுமுழுதாக கைப்பற்றும் திட்டத்தோடு பல முனைகளில் இருந்து பல முறைகள் முன்னேற முயன்று கொண்டிருந்தது சிங்களப்படைகள். வட தமிழீழம் எங்கும் அந்நிய தாக்குதல்களால் கந்தகம் சுமந்து நின்றது தமிழனின் சுவாசப்பை. வான்படை வானூர்திகள், எறிகணைகள் என ஊர் முழுக்க பல உயிர்களை தின்றன. நாங்கள் பயத்தினில் ஒடுங்கி போய் கிடந்தோம்.

பதுங்ககழிக்குள் பல நாட்கள் வாழ்ந்தோம் இடரை சுமக்கும் சுமையாளிகளாய் சாவோடும் நோயோடும் பசியோடும் போராடினோம். இப்படியான ஒரு பொழுதாகத்தான் 28 ஆம் நாளும் எமக்கு விடிந்தது. ஆனால் அன்றைய நாள் சிங்களத்துக்கு பெரும் அதிர்சசியை கொடுத்தது. யாழ்ப்பாணத்துக்குள் தன் ஆளுகையை விரித்திட பலாலி மண்ணை கோட்டையாக்கி வைத்திருந்த சிங்களத்துக்கு அந்த கோட்டைக்குள்ளே வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்எதிர்ப்பு படையணி பலத்த அடியை கொடுக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை கொடுக்க துணிந்த விடுதலைப் புலிகள் பலாலி வானூர்தி தளத்துக்குள் முதுநிலை தளபதிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த படைக்காவி வானூர்தியான அவ்ரோ வான்கலத்தை இலக்காக்கினர். அடித்த அடி தவறவில்லை இலக்கு முற்றுமுழுதாக சிதைந்து 40 ற்கும் மேலான படைகளையும் 10 பேரளவிலான முதுநிலை தளபதிகளையும் கொன்று குவித்தது.

தமிழினம் பதுங்ககழியில் இருந்து வெளியில் வந்தது தம்மை அழிக்க படையேற்றி வந்தவன் அழிந்து கிடந்ததை பார்த்து மகிழ்ந்தது. “ எங்கட பெடியள் விடமாட்டாங்கள்…“ மீண்டும் வெற்றி வசனத்தை ஊரே உரைத்தது. ஆனால் சிங்களம் மட்டும் மௌனமாக அழுதது. அந்த இனிய பொழுதோடு நாம் தூங்கிப்போனோம். மறுநாள் விடிந்த போது மீண்டும் மறு மகிழ்வு. தொடர் மகிழ்வால் தமிழீழ மண் ஆனந்த கண்ணீர் வடித்தது. 29 ஆம் நாள் நவக்கிரி என்ற இடத்தில் தமிழீழ வான் எல்லைக்குள் பறந்த இன்னும் ஒரு அவ்ரோ வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட போது சிங்களம் அதிர்ச்சியின் உச்சத்துக்கும் தமிழீழம் மகிழ்வின் உச்சத்துக்கும் போனதை மறுக்கவே முடியாது. சந்திரிக்காவும் மாமனார் ரத்வத்தையும் தொடர்ந்த தாக்குதல்களால் துவன்டு கிடந்ததை எங்கள் தேசமே பார்த்து மகிழ்ந்தது….

Allgemein