யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் தந்தை செல்வா நினைவுப் பேருரை!!

தந்தை செல்வா நினைவுப் பேருரை நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நடைபெறவுள்ளது. அத்துடன் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஊடாக முதன்முறையாக நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம் நாளை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தந்தை செல்வா நினைவாக நிறுவப்பட்ட செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை தற்போது பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய மாணவர்களுக்கு தந்தை செல்வாவின் செயற்பாடு மற்றும் பணிகள் பற்றிய விளக்கங்களையும், அதன் மூலம் தமிழினம் விடுதலை பெறுவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்குடன் இந்த வருடம் தொடக்கம் மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஜி.சீ.ஈ. உயர்தரத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், கேடயம், நினைவு நூல் என்பன வழங்கும் பரிசளிப்பு விழா நாளை புதன்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வுக்கு தந்தை செல்வாவின் இளைய புதல்வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவுநருமாகிய மூத்த சட்டத்தரணி சந்திரகாசன் தலைமை தாங்குவார். தகைசார் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் சிறப்புரையாற்றுவார்.

தந்தை செல்வா நினைவுப் பேருரை, யாழ்.நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுத் திடலில், புதன்கிழமை காலை 9.30 மணிக்கு, தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுத் தலைவர் சு.ஜெபநேசன் தலைமையில் நடைபெறும். நினைவுப் பேருரையை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண நிகழ்த்துவார்.

இதேவேளை, தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’ நாளை புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சுகாதாரம், போஷாக்கு, சுதேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வு’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.

Allgemein