ஜனாதிபதி சொன்னால் காணிகள் விடுவிக்கப்படும் படையினர் தடையல்ல என இரா. சம்பந்தர் தெரிவிப்பு

பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி தெரிவிக்கும் பட்சத்தில் காணிகளை விடுவிப்பதற்கு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இரா.சம்பந்தன் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதன்படி, இன்றைய தினம் (நேற்று) பாது காப்பு அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன, அமைச்சின் செயலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இராணுவத் தளபதி, ஏனைய படைகளின் தளபதிகள் மற்றும் த.தே. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம். அதற்கான ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தது என தெரிவித்து அதி பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டன.
தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. விடு தலைப் புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை. ஆனாலும் யுத்தம் முடிந்த பின்னரும் பொது மக்களின் காணிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
எனினும், அந்த மக்களின் காணிகள் உரியவர்களிடம் கொடுக்கப்படவேண்டும் என்பதை இச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும், இராணுவ தளபதியிடமும் வலியுறுத்தியிருந்தோம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய இராணுவத் தளபதி, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. அத்துடன், பலாத்காரமாக நாங்கள் எந்த காணிகளையும் வைத்திருக்கவில்லை.
இது குறித்து முடிவெடுக்க வேண்டியது சிவில் அதிகாரமே. ஜனாதிபதி காணிகளை விடுவிக்க சொன்னால் நாங்கள் காணிகளை விடுவிக்க தயாராக இருக்கின்றோம். அதனை மீறி எங்களால் செயற்பட முடியாது என இராணுவத்தளபதி குறிப்பிட்டதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும், வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் குறித்தும் நேற்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, கேப்பாப்பிலவில் ஒருதொகுதி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அங்கு உள்ள இராணுவ அதிகாரிகளுக்கும், த.தே.கூட்டமை ப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிவமோகன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நாளை 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது அரசாங்க அதிபர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராயப்படும். இதனையடுத்து கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், வலிகாமத்தை பொறுத்தவரை 4 ஆயிரத்து 500 ஏக்கர் காணி படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. காணிகளின் கணிசமான அளவு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுதினம் 20ஆம் திகதி மாவை சேனாதிராசா, சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று நிலைமைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Allgemein