வருவீரா! வருவீரா!!

வருவீரா! வருவீரா!!
மாவீரர்களே! மாவீராங்கனைகளே!!
தருவீரா! தருவீரா!!
தாயகம்! தமிழரின் தமிழீழத் தாயகம்!!

நினைவுகள் என்றும் உறங்காது உந்தன்
நெஞ்சுரம் என்றும் மறவாது
கடலலை என்றும் ஓயாது உந்தன்
கனவது என்றும் கலையாது

புலிப்படை ஆடிய களம்நூறு
புறநானூ றறியா வீரவரலாறு
விதைகுழி புகுந்த உடற்கூறு
விருட்சமாய் எழுமே பலநூறு

எம் அரணே! எம்மினத் திறனே!!
எம் இறையே! எம்நில உறையே!!

கல்லறை யுந்தன் குரல் கேட்கும்
கார்த்திகை பூக்கள் மலர்ந் தாடும்
காவலர் நின்தாள் சுடர் ஆடும்
கண்களில் நீரும் வழிந் தோடும்

பேரினவாத பகை முடிக்கநல்
பெரு மாவீரன் படையணியுள்
ஆருயிர் ஈந்த திருமகள்கள்
அடிபணிந்தே யாம் தொழுதல்

எம் கடனே! எம்மினத் திடனே!!
எம் நெறியே! எம்மினப் பொறியே!!

விடியலில் ஞாயிறு எழுந் தேகும்
வெஞ்சமர் கதிரோன் புகழ்பரப்பும்
கடலும் காற்றும் நிலமும் நிலவும்
கரும்புலி வீரம் பறைசாற்றும்

உலகம் முடியும் நாள் வரையும்
உம்மை வீழ்ந்தே பணிந் திடுவோம்
ஈழம் அடையும் நாள் வரையும்
ஈகியர் நினைந்தே வாழ் ந்திருப்போம்

எம் நிலமே! எம்மின நலமே!!
எம் கனவே! எம்மின உணர்வே!!

Allgemein