இரணைமடு நீர் யாழ்ப்பாணத்துக்கு இல்லை! – முதலமைச்சர் திட்டவட்டம்

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ்.மாவட்டத்துக்கான குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்படும் என்றும், இரணைமடு நீர் யாழ்.மாவட்டத்திற்கு வராது. அது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘யாழ்ப்பாணம்- இரணைமடு குடிநீர் திட்டம் வட மாகாணசபை அமைவதற்கு முன்பதாகவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். வடமாகாணசபை அமைந்த பின்னர் இரணைமடு குளத்தை நம்பியிருக்கும் விவசாயிகளுடன் பேசப்பட்டது. மேலும் நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கையும் பெறப்பட்டிருந்தது. இவற்றினடிப்படையில் கொழும்பு சென்று ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் பேசப்பட்டதற்கு அமைய, இரணைமடு-யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

அதாவது இரணைமடு கிளிநொச்சி மக்களுக்கும், மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் யாழ்ப்பாண மக்களுக்கும், பிறிதொரு திட்டமாக யாழ்.கழிவு நீர் வடிகால்களை சீரமைக்கும் திட்டமுமாக மூன்று திட்டங்களாக பிரிக்கப்பட்டன. இதில் மாற்றங்கள் எவையும் இல்லை. வட மாகாணம் குறிப்பாக யாழ்.மாவட்டம் குடிநீருக்கு பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளமையினை நாங்கள் நன்றாக அறிகிறோம்.

அதே சமயம் முன்னர் கிணறுகள் இருந்த காலத்தில் இவ்வாறான நிலையிருக்கவில்லை. தற்சமயம் கிணறுகளும் மாசடைந்திருக்கும் நிலையில் குடிநீருக்கு பலத்த நெருக்கடி எழுந்துள்ளது. இந்நிலையில் நீரை வெளியில் இருந்து கொண்டுவர வேண்டியநிலை எழுந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி யாழ்.மாவட்டத்தின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு யாழ்.மருதங்கேணியில் அமைக்கப்படும், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் பயன்படுத்தப்படும்.

அதேவேளை இரணைமடு குளம் புனரமைக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும். மூன்றாவது பிரிவான யாழ்.கழிவு நீர் வடிகாலமைப்பு திருத்தம் செய்வதற்கான பொறுப்பை பிரெஞ்சு அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது. ஆனால் பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் அதிலிருந்து பின்வாங்கியிருக்கின்றது. ஆனால் அந்த திட்டத்திற்கான நிதியை வேறு முதலீட் டாளர்கள் ஊடாக பெற்றுக் கொடுப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளது.

மேலு ம் தற்சமயம் ஆறுமுகம் திட்டம் தொடர்பாகவும்பேசப்படுகின்றது. அது தொடர்பாக ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணம் இரணைமடு குடிநீர் திட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அது மூன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே யாழ்ப்பாணத்திற்கு எங்கிருந்து நீர் கொண்டுவரப் போகிறீர்கள் என முரண்பட்டு கொள்ள வேண்டிய அவசியம்இல்லை என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Allgemein