சம்பந்தன், மாவைக்கு அரசியல் தெரியாது! சுமந்திரனுக்கு அறவே தெரியாது : சங்கரி

சம்பந்தன் மாவைக்கு அரசியல் தெரியாது, சுமந்திரனுக்கு அறவே அரசியல் தெரியாது என தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, இவர்களால் தமிழ் இனம் அழிக்கப்படுகிறது என்பதை மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பால் நமது சமூகத்தைப் பற்றியும் பேசுவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தாடல் நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முன்னைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றுக்கு வந்தனர். ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்படுகிறோம்;. பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளோம்.

பிரபாகரனுக்கு நான் எதிரி இல்லை. நான் சகல விடயங்களையும் ஆழ்ந்து அறிந்தவன் என்ற ரீதியில் சில நடவடிக்கையில் இருந்து பிரபாகரனை திருந்தி செயற்படச் சொன்னேன். தம்பி சாபத்துக்கு ஆளாக போகிறாய் உடனடியாக பேச்சுவாரத்தையை நடத்துங்கள். என தெரிவித்தேன். அன்று நான் கூறியதை கேட்டிருந்தால். பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார். அன்றைய ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினேன். ஆனால் நிறுத்தவில்லை.

இப்பகுதியில் ஒருவர் கூட யுத்தத்தை நிறுத்துவதற்கு நினைத்திருந்தால் இன்று இந்த நிலை எமக்கு வந்திருக்காது. பல தலைவர்கள், பல நாடுகள் கேட்டார்கள் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டார்கள். கேட்கவில்லை இறுதியில் மக்கள் அழிக்கப்பட்டார்கள். தப்பி ஓடிவந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், அங்கு நடந்தவை பல எமக்கு வெட்கம், அவமானம் என்பவற்றை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் என அனைவரும் அறிவார்கள்.

யுத்தத்தை நிறுத்துமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சொல்லவில்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய புனிதமான கடமையை யாரும் செய்யவில்லை. நடந்த அநீதிகளுக்கு தற்போது நீதி வேண்டி சர்வதேசத்திடம் போய் நிற்கிறோம்.

விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களை அதிகம் கொலைசெய்தார்கள் என புதிதாக வந்துள்ள சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்து விட்டு அத்துடன் 2 வருடங்களில் நல்ல வெளிநாட்டு தலையீடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே இது நடக்கப்போற விடயம் இல்லை சர்வதேச விசாரணையும் நடக்கப்போவதில்லை.

அரசில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். போர் வீரர்களை எந்த வகையிலும் தண்டிக்க மாட்டார்கள் என தெரிவித்து வருகிறார்கள். போர் வீரரை தண்டிக்காதவர்கள் ஏன் இரண்டு வருடம் கேட்கிறார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்?

கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அப்போது தான் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் பெண்கள் தொடர்பான வன்முறைகளை பெண்களே விசாரணை செய்ய வேண்டும்.

விடுதலைப்புலிகள் ஏகபிரதிநிதிகள் அல்ல என தெரிவித்த நான் துரோகி, அவர்களை ஏக பிரதிநிதி என சொல்லியிருந்தால் நான் தான் இன்று தலைவராக இருந்திருப்பேன். சம்பந்தன் அல்ல. இதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை. எனது கடமையை மக்களுக்கு செய்யவில்லை என்பது மட்டும் தான் எனது கவலை.

தமிழின வரலாற்றில் என்னை தோற்கடித்தது படுபாதகமான செயல். அதை செய்தது மாவை சேனாதிராஜா தான். மக்களை ஏமாற்றுபவர்களை மக்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்களை உசுப் பேற்றி அரசியல் செய்வதற்கு நான் மடையன் அல்ல.ஏமாற்றுபவர்களிடம் இருந்து எமது மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உண்டு .

சம்பந்தன், மாவைக்கு அரசியல் தெரியாது. சுமந்திரனுக்கு அறவே அரசியல் தெரியாது. இவர்கள் எல்லாரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.பொய்யர்களின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். தமிழ் அரசு கட்சி ஒரு மாயை அதில் பித்தலாட்டம் நிரம்பி காணப்படுகிறது அது மாவை சேனாதிராஜாவுக்காக உருவாக்கப்பட்டது. இதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையானவர்களை அறிந்து கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Allgemein