மறக்கத்தகுமோ…?10.04.2017

தமிழீழ வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இன்றைய நாளை சர்வதேசம் இலகுவாக மறந்திட போவதில்லை. வருடத்தின் ஒருநாள் அவரது கருத்துக்களுக்காக காத்திருக்கும் சர்வதேசத்தை தன் பணிமனைக்கே அழைத்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து எங்கள் விடுதலைக்கான தேவையை அனைத்துலகுக்கும் உணர்த்திய நாள்.

சர்வதேசத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகளும் அதன் தலைமையைம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்று சிங்களம் உணர்ந்த நாள்.

சித்திரை மாதத்தின் 7ஆம் , 8 ஆம் நாட்களில் இருந்தே கிளிநொச்சி மண்ணில் வித்தியாசமான அதி உயர் செயற்றிறன் மிக்க கமராக்களுடன் பல நூறைத் தாண்டிய வாகனங்கள் அணிவகுக்க தொடங்கி இருந்தன. வீதிகள் முழுக்க வெளிநாட்டு நபர்களால் நிரம்பி இருந்தது. சிங்களமும் ஆங்கிலமும் ஹிந்தியும் மலையாளமும் என பல மொழி உச்சரிப்புக்கள் காற்றோடு கலந்ததன. விடையம் அறியாத மக்கள் „என்னடா நடக்குதிங்க “ மிரட்சியுடன் பார்த்து தமக்குள் குசுகுசுத்தார்கள். புலிகளின் குரல் வானொலியை சத்தமாக ஒலிக்க விட்டார்கள்.

நியமாகவா அண்ண சந்திக்க போறாராமா? இப்படித்தான் மக்கள் பேசிக் கொண்டார்கள். எதிர்பார்க்காத தருணத்தல் ஆனால் தேவையும் முக்கியத்துவமும் கொண்ட எதிர்பார்க்காத சந்திப்பு ஒன்றை சர்வதேசத்தின் அனைத்து ஊடகங்களுக்குமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான வருகையே கிளிநொச்சி மண்ணில் பல நூறு புதிய கமராக்களுடனான வாகனங்களின் பிரசன்னம்.

2002 சித்திரை ஒன்பதாம் நாள் மாநாட்டுக்கான ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலநூறு மடங்கு அதிகரித்திருந்தது புலனாய்வு போராளிகளும் காவல்துறையும் கிளிநொச்சி மண்ணில் பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருந்தனர்.

வந்திருந்த அனைவருக்குமான அனைத்து தேவைகளையும் அரசியல் பிரிவு போராளிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டன. அவசரம் அவசரமாக 10 ஆம் நாள் அனைவரும் மாநாட்டுக்கான தயார்படுத்தல்களுடன் தயாராகி இருந்தனர். எங்கே என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை எனிலும் அனைவரும் எதிர்பார்த்து ஊகித்திருந்த இடம் „தூயவன் அரசறிவியல் கல்லூரி“ மண்டபம். ஊகித்ததை போலவே அனைவரும் அங்கே கொண்டு செல்லப்பட்டு மண்டபத்தில் இருக்க வைக்கப்பட்ட போது யாராலும் நின்மதியாக இருக்க முடியவில்லை. அனைவரும் வாசல் கதவையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் கதவு திறக்கப்படும் போது தலைவர்தான் வருகிறார் என்று கமராவை தயார்நிலைக்கு கொண்டு வருவதும் ஏமாந்து போவதுமாக இருக்க குறித்த அந்த நேரத்தில் அந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அனைவரும் அமைதியாக இருக்க சொல்லப்படுகிறது. தலைவர் வந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாசல் கதவை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள் எப்படி இது சாத்தியம்? தம்முன்னே நிற்கும் பிரபாகரன் எப்படி மண்டபத்துக்குள் வந்தார்? வாயிற்கதவையும் மேடையையும் திரும்பித்திரும்பி பாக்கிறார்கள். கமராக்கள் பளிச்சிடுகின்றன. எத்தனையோ போராளிகளே காண முடியாமல் தமது உயிரை மண்ணுக்காக கொடுத்து விட்டு சென்ற நிலையில் தமக்கு முன்னே சாதாரணமான ஒருவனாக வந்திருந்தவரை கண்டு தமது எதிர்பார்பபுக்களை எல்லாம் தவிடுபொடியாக்கிய விட்டதாகவே நினைத்தார்கள். சிங்கள அரசின் பொய்மையான பரப்புரைகளை உடைத்தெறிந்து தமிழினத்தின் விடியலின் ஒளி மிக மிக சாதாரணமானவராக நிற்பதை சர்வதேசம் தம் கமராக்களுள் முதலில் பதிவு செய்து கொண்டது.

பல நூறு பத்திரிகையாளர் பல ஆயிரம் வினாக்களோடு வந்திருக்க, தேசத்தின் குரல் பாலா அண்ணரோடும் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணையோடும் தலைவர் அத்தனை பேரையும் அத்தனை வினாக்களையும் எதிர்கொண்டார். நினைக்க முடியாத படி உண்மையான பதில்களால் வாயடைத்து நின்றது சர்வதேச சமூகம்.

சர்வதேச தளத்தில் பிரபாகரனை பற்றிய ஒரு மாயையை கெட்டவனாக தீவிரவாதியாக ஏற்படுத்தி இருந்த சிங்களத்தின் அத்தனை திட்டங்களையும் இன்றைய நாள் உடைத்தெறிந்து தமிழனின் விடுதலைப் போராட்டத்தின் உண்மையை உணர்ந்த நாளாகவும் கொள்ளலாம்.

தாயகம் கடந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்ட விடுதலைப்போராட்டத்தில் அனைத்துலக தமிழனின் ஒட்டுமொத்த குரலாக பதிவாகிக் கொண்டிருந்த அண்ணையின் பதில்கள் ஒவ்வொன்றின் மூலமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச வளர்ச்சியை உணரத் தொடங்கியது அனைத்துலகம்.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அதற்கான தேசியத்தலைவரின் பதில்களுக்கும் அப்பால் தேசியத்தலைவர் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளை உள்வாங்கும் முறைமையும் எந்தவொரு கட்டத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு மிகத்தேர்ந்த தலைவனுக்கு உரிய அணுமுறையை கையாண்டதாகவே, ஆச்சரியத்துடன் அங்கிருந்த பத்திரையாளர்கள் குறித்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் தலைவரால் சர்வதேசத்தின் முன் வைக்கப்படும் வரலாற்று முக்கியம் பெற்ற மாவீரர் நாள் உரைக்காக காத்திருந்த அனைத்துலகத்துக்கும் அவரிடம் நேரடியாக வினாக்களை கேட்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது அத்தனை வினாக்களையும் கேட்டார்கள். ராஜீவ் கொலை தொடக்கம் ரனிலில் வஞ்சகம் வரை வினாக்களாக எழுந்தன. அத்தனைக்கும் உண்மையான பதில்கள் கிடைத்த திருப்த்தி அங்கே நின்றவர்களுக்கு கிடைத்தன.

பெறுமதியான விடைகளோடும் காணவே முடியாது என்று நினைத்த ஒரு பெரும் தலைவனுடனான சந்திப்பின் மகிழ்வுடனும் ஊடகவியலாளர்கள் தம் தளம் திரும்பினர்..

நினைவுடன்  கவிமகன்

Merken

Allgemein