சவாலாக மாறும் சவேந்திர சில்வா

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் இல்லை என்றும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்த தருணத்தில் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் அவர் இலங்கை இராணுவத்தின் 28வது பொது உதவி அதிகாரியாக பதவியேற்றுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது போலவே இந்தப பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் விக்ரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்தே இந்தப் பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார். இராணுவத் தளபதிக்கு துணையான நிர்வாகப் பணிகளை ஆற்றுவது இந்தப் பதவியில் உள்ளவரின் பொறுப்பாகும்.

இந்தப் பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதானது நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக தென்னாபிரிக்காவின் மனித உரிமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூகா குறிப்பிட்டிருந்தார்.

அவர் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டமைக்கான காரணத்துக்கும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுப்பது தொடர்பாக நடத்தப்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தான் இறுதிக்கட்டப் போரின் போது 58வது டிவிஷனுக்கு தலைமை தாங்கியவர்.

இறுதிப் போரில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களுக்காகவும் போரின் முடிவில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள், போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டதற்கு அல்லது கொல்லப்பட்டதற்கும் இவர் நேரடியாகப் பொறுப்பாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியாது.

அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் கீழ் இவர் செயற்பட்டதாகவும் கூட குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

போரின் இறுதிக்கட்டத்தில் 58வது டிவிஷனிடம் சரணடைந்த எழிலன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளின் உறவினர்கள் சார்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பான வாதங்கள் நடந்துள்ளன.

இந்த ஆட்கொண்ரவு மனுக்கள் வவுனியா நீதிமன்றத்திலும் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்திலும் பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற போதிலும் இப்போது தான் முதல் முறையாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

போர் முடிவுக்கு வந்த பின்னர் 58வது டிவிஷனின் தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கே.சி. குணவர்தனவையே இதுவரை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

அவர் சரணடைந்தவர்களின் பட்டியல் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பல அறிக்கைளைச் சமர்ப்பித்தும் சாட்சியமளித்தும் இழுத்தடித்து விட்டு கடைசியாக கடந்த 30ம் திகதி தான் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தான் அந்தக் காலகட்டத்தில் 58வது டிவிஷனுக்கு தலைமை தாங்கினார், அவருக்குத் தான் தெரியும் என்று சாட்சியம் அளித்திருந்தார்.

அதற்குப் பின்னர் அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கோர அதற்கு அரச சட்டத்தரணி கடுமையாக எதிர்த்து வாதாடியிருந்தார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவரை விசாரிக்க அழைப்பாணை விடுக்கக்கூடாது என்றும் அரச சட்டத்தரணி வாதிட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா 58வது டிவிஷனின் தளபதியாக இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவரிடமே விசாரணை நடத்த வேண்டும் ஆனால் அவருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்புமில்லை என்று அரச சட்டத்தரணி வாதிட்டமை இந்த வழக்கிலிருந்து அவரைக் காப்பாற்ற எடுக்கப்படும் உயர்மட்ட முயற்சிகளை வெளிப்படுத்தியது.

எவ்வாறாயினும் அடுத்த வழக்கு விசாரணையின் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமா இல்லையா என்று அறிவிப்பதாக நீதவான் கூறியிருக்கிறார்.

இவ்வாறான ஒரு நிலையில் தான் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தலைமையகத்தில் உயர்மட்டப் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

ற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இறுதிக்கட்டப் போருடன் தொடர்புடைய சர்ச்சைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியிருக்கும் உயர்மட்டத் தளபதிகளுக்கு மேல்நிலைப் பதவிகளை வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது அல்லது நிறுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் 2015ம் ஆண்டு இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது கடுமையான எதிர்ப்புகளை அரசாங்கம் சந்திக்க நேரிட்டது.

அதற்குப் பின்னர் சர்ச்சைக்குரிய அதிகாரிகளை முக்கிய பதவிக்கு நியமிக்காமல் ஓய்வுபெற வைக்கும் நடைமுறையையே அரசாங்கம் கையாண்டு வருகிறது.

எனினும், இறுதிக்கட்டப் போரில் 53வது டிவிஷனுக்குத் தலைமை தாங்கியவரும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களில் ஒருவருமாகிய மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இராணுவத் தலைமையகத்தில் இராணுவ ஆயுத தளபாடப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்படார்.

அதுபோலவே இறுதிக்கட்டப் போரில் 59வது டிவிஷனுக்குத் தலைமை தாங்கியவரும் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களில் ஒருவருமாகிய மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இன்னமும் இராணுவத் தலைமையகத்தில் காலாட்படைகளின் தளபதியாகப் பணியாற்றுகிறார்.

இவையும் கூட தற்போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள பதவிக்கு இணையான பதவிகள் தான்.

எவ்வாறாயினும் இறுதிக்கட்டப் போருடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகளை வழங்கி சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சவால் விடுத்தது போன்று தற்போதைய அரசாங்கம் செயற்படவில்லை.

போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையிலும் ஐநாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியூயோர்க்கில் பணிக்கு அமர்த்தி சவால் விட்டிருந்தது மஹிந்த ராஜபக்ச அரசாங்கம்.

அதுபோலவே இறுதிக்கட்டப் போரில் டிவிஷன்களுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பிரதித் தூதுவர் பதவிகளை அளித்து சர்வதேச சமூகத்துக்கு அப்போதைய அரசாங்கம் கடும் சவாலை ஏற்படுத்தியது.

இப்போதைய அரசாங்கமும் கூட முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு பல இராஜதந்திரப் பதவிகளை அளித்திருந்தாலும், சேவையில் உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இராணுவ அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்திருக்கிறது.

அதற்காக அவர்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளது என்று கூற முடியாது. ஏனென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்ட படையினரை அவர்கள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கினாலும் தான் பாதுகாப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உறுதியளித்திருக்கிறார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு அரச சட்டத்தரணி தெரிவித்த கடும் எதிர்ப்பின் பின்னணியில் இருந்து இதனைப் பார்த்தால் நிலைமைகளை விளங்கிக் கொள்ளலாம்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அதிகாரிகள் படையினரை முக்கிய பதவிகளில் நியமிக்காமல் வெளியேற்றுகின்ற ஓர் இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தி வருகிறது.

ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் கூட இதற்கான ஆய்வு பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு தொடர்ச்சியாக வலியுறத்தி வந்திருக்கிறார். ஆனால் அரசாங்கத்தினால் அத்தகைய நடைமுறையை உள்நாட்டுக்குள் பிரயோகிக்க முடியாதிருக்கிறது.

ஐநா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கும் பயிற்சிக்காக வெளிநாட்டுக்கு அனுப்பும் படையினர் விடயத்தில் இந்த ஆய்வுப் பொறிமுறையை செயற்படுத்த இணங்கினாலும் உள்ளக மட்டத்தில் அதனைச் செயற்படுத்தினால் குழப்பங்கள் உருவாகும் என்று அரசாங்கம் அச்சம் கொள்கிறது.

அதேவேளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விட மூப்பான அதிகாரிகள் ஒவ்வொருவராக ஓய்வுபெற்று வரும் நிலையில் இவரை முழுமையாக ஓரம் கட்ட முடியாத நிலையும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னமும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதுவரையில் அவரை வெளியே அனுப்பவும் முடியாமல் இராணுவ உயர்மட்டப் பதவிகளை வழங்கவும் முடியாமல் அரசாங்கம் கடுமையான சவால்களையே சந்திக்கப் போகிறது.

Allgemein