அரசியல் பிரச்சினைக்கு தீர்வு : தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் : சம்பிக்க

நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழர் தரப்பு நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அதை விடுத்து சர்வதேசத்தை வரவழைத்து தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கும்இ சர்வதேச அழுத்தங்களுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கும் தீர்வு காணும்வரையில் நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பிளவுபடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளமை மற்றும் சர்வதேச பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

குறித்த பிரதேசங்களுக்கு மாத்திரம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் அரசியல் செய்யும் யுகம்  கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசாங்கம் நாட்டின் சகல பகுதியிலும் அனைவருக்கும் சென்றடையும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சுகாதார ரீதியிலும், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் சகல பகுதிகளுக்கு சமமான வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையை பொருளாதார  மத்திய நிலையமாக மாற்றி அதன் மூலம் நாட்டின் வறுமை மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

ஒரு சிலர் போயா தினங்களை கணக்கில் கொண்டு அதன் மூலம் ஆட்சியை மாற்றுவதாக கூறி வருகின்றனர். இரண்டு வெசாக் போயாவில் ஆட்சி மாறும் என கனவு கண்டு வருகின்றனர். எனினும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டிற்கு வேறு ஒரு அரசியல் பாதையை வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த தேர்தலின் போதும் தனித் தனியாக நாம் தேர்தலில் போட்டியிடலாம். எனினும்  உள்ளுராட்சி தேர்தலின் பின்னும் பொதுத் தேர்தலின் பின்னும் அதேபோல் ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் பிரதான இரண்டு கட்சிகளும் இணைத்து ஆட்சியை முன்னெடுத்து செல்லும் என நாம் உறுதிப்படுத்துகின்றோம்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் அதன் மூலம் ஆட்சி கவிழும் என கனவு காணும் அனைவருக்கும் நாம் ஒன்று சொல்ல விரும்புகின்றோம். இந்த நல்லாட்சி நதி மீண்டும் திரும்பாது. சிறு சிறு ஏற்றம் இறக்கத்துடன் நதி வளைந்து சென்றாலும் ஒருபோதும் வற்றப்போவதில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த நாட்டின் அபிவிருத்து மற்றும் தேசிய பிரச்சினைகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் அனைத்தையும் வெற்றிகொண்டு அதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஒன்றை உருவாக்கும் வரையில் நல்லாட்சி அரசாங்கதின் பயணம் தொடரும்.

அதேபோல் இன்று வடக்கு கிழக்கில் இனவாதம் பேசிக்கொண்டு அதன் மூலம் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் வடக்கு கிழக்கின் அரசியல் பயணத்தை காரணமாக வைத்துக்கொண்டு அதன் மூலம் ஆட்சியை கவிழ்க்கலாம் என முயற்சிக்கும் நபர்களுக்கு எமது அரசாங்கதின் மூலம் எந்தவித வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்க முடியாது. புதிய அரசியல் அமைப்பின் மூலம் இனவாதம் பரவுவதையோ அல்லது நாட்டை  இரண்டாக பிளவு படுத்துவதையோ  நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமித் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச தரப்புடன் இணைந்து நாட்டை பிரிக்க எந்த நடவடிக்கை எடுத்தாளும் அதற்கு நல்லாட்சி அரசாங்கமே தடையாக செயற்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அதை விடுத்து சர்வதேச தரப்பை வரவழைத்து தீர்வு காண நினைப்பது ஒருபோதும் வெற்றியளிக்காது. பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் சரியான முறைமையை கையாண்டு வருகின்றது. நாம் எமது உள்ளக பொறிமுறை மூலமாக பிரச்சினைகளை தீர்க்க செயற்பட்டு வருகின்றோம்  எனவும் அவர் தெரிவித்தார்.

Allgemein