கொழும்புக்கு அருகே தீப்பற்றிய கப்பலில் தொடரும் புகை…

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பாரிய கொள்கலன் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ நேற்று மாலை அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா, இந்திய கடற்படைகள் தெரிவித்துள்ளன.

பனாமா கொடியுடன் கொழும்பில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த எம்.வி.டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் நேற்றுமுன்தினம் தீவிபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து 14 ஆயிரம் கொள்கலன்களுடன், இந்தக் கப்பல் சூயெஸ் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் காலை 10.55 மணியளவில் தீப்பிடித்தது.

இதையடுத்து, உள்ளூர் முகவரால் சிறிலங்கா கடற்படையிடம் உதவி கோரப்பட்டது.

உடனடியாக சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும், இரண்டு இழுவைப் படகுகளும் விரைந்து சென்று கப்பலில் இருந்த 21 மாலுமிகளை மீட்டதுடன், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

எனினும் தீ பெருமெடுப்பில் பரவிக் கொண்டிருந்ததால், சிறிலங்கா கடற்படையினரால் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டது.

அதேவேளை, கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைலுக்கு அப்பால் வரை இழுத்து வரப்பட்டது.

சிறிலங்கா கடற்படையின் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலுடன், இந்திய கடலோரக் காவல்படையின் சூர் என்ற கப்பலும், இந்திய கடற்படையின் காரியல் மற்றும் தர்ஷக் ஆகிய கப்பல்களும் விரைந்து சென்று தீயணைப்பில் ஈடுபட்டன.

இவற்றுக்கு மேலதிகமாக சிறிலங்கா கடற்படையின் மேலும் 3 அதிவேக தாக்குதல் படகுகளும், விமானப்படையின் பெல் உலங்குவானூர்தி ஒன்றும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தக் கூட்டு முயற்சியின் விளைவாக, நேற்று பிற்பகல் கப்பலில் பரவிய தீ அணைக்கப்பட்டது. எனினும், கப்பலில் இருந்து புகை வந்து கொண்டிருப்பதால் தொடர்ந்தும் கடற்படைக் கப்பல்களில் இருந்து நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய அதிகாரிகள், தீப்பிடித்த கப்பலில் ஆபத்தான பொருட்கள் இருப்பதாகவும் அதனால், கப்பல் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் எம்வி.டானியேலா என்ற கப்பல் தரித்துள்ளது.

கப்பலின் இடது பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த தீ நேற்றுக் காலை அணைக்கப்பட்டது. எனினும் வலப்பறத்தில் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், புகை வந்து கொண்டிருப்பதால், இந்திய, சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் நீரைப் பாய்ச்சி வருகின்றன.

Allgemein