போர்க் குற்றம் இல்லை எனில் அவகாசம் கோரியது ஏன்?

இலங்கையில் இடம்பெற்ற  போரின்போது, போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தத்தின் போது யார் குற்றமிழைத்தாலும், அது மனித குலத்துக்கு எதிரான குற்றமே. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்களுள் ராஜித சேனாரத்ன, தமிழ் மக்களுக்கு வேண்டியவர். அவர், யுத்தக் குற்றம் தொடர்பில் எதைக் கூறினார் என்று எனக்குத் தெரியாது. எங்களுடைய பத்திரிகைகள், அவர் சொன்ன கருத்துத் தொடர்பில் என்ன செய்தி வெளியிட்டிருக்கின்றது என்றும் எனக்குத் தெரியாது.

அவர் ஒருவேளை, யுத்தக் குற்றங்கள் நடைபெறவில்லை என்று கூறும் போது, “இங்கு நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரித்து, இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை’ என்று அர்த்தத்தில் கூறியிருக்கக்கூடும்.

ஆகவேதான் நாங்கள் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும், விசாரணைகள் மூலம் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கூறுகின்றோம்.

ஒரு சம்பவம் நடைபெற்றதா, இல்லையா என்பது, அது தொடர்பிலான விசாரணை நடைபெற்ற பின்னர்தான் அறியப்பட வேண்டும். அவ்வாறான விசாரணை நடப்பதற்கு முதல் எவரும் அச்சம்பவம் நடக்கவில்லை என்று கூற முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பிழை செய்ததார்களா, இல்லையா என்பது, அதற்கு உரியவாறு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுத்து விசாரணை செய்ய வேண்டுமோ, அந்த விசாரணைகளை நடத்துங்கள்.

யுத்தத்தின் போது யார் குற்றம் செய்தாலும், அக்குற்றம், மக்களுக்கு எதிரான குற்றங்களாகவே நடைபெற்றிருக்கின்றன. மக்களுக்கு எதிரான குற்றங்கள் யார் செய்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அது, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்.

அமைச்சர் என்ன கூறினார் என்று எனக்கு கூற முடியாது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்தான் ஜெனீவாவில் சென்று நடவடிக்கை எடுக்கின்றோம் என்று அரசாங்கம் கூறிவருகின்றது. அரசாங்கம், இந்த அமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், ஜெனீவாவில் அவர்களின் நடவடிக்கை பொருத்தமானதாக இருக்காது.

விஜயகுமாரதுங்க காலத்தில் இருந்து, ராஜித சேனாரத்ன, தமிழ் மக்களோடு ஒன்றி ஒருமித்துப் பழகியவர். மிகவும் நல்லவர். தமிழ் மக்களுக்கு வேண்டியவர் என்பதையும் நான் கூறிக் கொள்ளுகின்றேன் என்றார்.

Allgemein