தமிழ் மக்களை உதாசீனப்படுத்தினால் அரசாங்கத்திற்கு தக்க பதிலடி கிடைக்கும்: சுரேஷ்

தமிழ் மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசாங்கம் இருக்குமேயானால், அதற்கான பதிலை மக்கள் வழங்குவார்கள் என்றும் அது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டம் தொடர்பாக யாழில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களது போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதானது, போராட்டங்களை மேலும் வலுவடையச் செய்யுமென குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், மக்களது கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

மக்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்திலேயே அரசாங்கம் கூறுகின்ற நல்லாட்சி என்பது ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Allgemein