ஆனந்தபுரம்…

நெஞ்சை கிழித்து
கொட்டும் விடுதலைக்
குருதியின் சிவப்பில்
நிகழ் வீரம் சொல்ல
உறைந்து நிற்கும்
நிமிர்வு… ஆனந்தபுரம்

வானத்து மழையென
இரும்பு துண்டுகள்
வீழினும்
வீழாத வீரமாய்
நஞ்சுக் குப்பிகள்
நிமிர்ந்து நின்ற
காலத்தின் பதிவு

ஆண்டவனுக்கே
அலையெடுத்த
விழி மழையில்
கரைந்து போன
வெடியொலிகளின்
அதிர்வின் உச்சம்

இவ்வுச்சத்தில் தானே
நீங்கள் நின்று கொண்டு
தீண்ட முடியாத
எங்கள் உடல்கள் மேல்
மேய்ந்தீர்கள்.
உங்கள் ரவைகளை கண்டு
நாங்கள் பயந்ததில்லை
அதனால் தான் எங்கள்
உயிர்களின் மேல் நின்று
ஊஞ்சலாடுகிறீர்கள்.

நாங்கள் கடவுளரை
அழைக்கவில்லை
எங்கள் ஆயுதங்களை
அணைத்துக்கொண்டோம்
நாங்கள் கண் துஞ்சவில்லை
வீரத்தை விஞ்சி நின்றோம்
எங்கள் உயிருக்காய்
கெஞ்சவில்லை
உரிமைக்காய் உம்மை
மிஞ்சி நின்றோம்

அதனால் தான்
முள்ளிவாய்க்காலும்
ஆனந்தபுரமும் உங்களால்
நிர்ணயிக்கப்பட்டது.
பஞ்சம் போக்க
வந்தவனுக்கெல்லாம்
பகடை ஆகியது எம்
தமிழின் பாரம்பரியம்

தமிழ் வீரம்
மண்ணில் வீழ்த்தப்பட்டது
நீங்கள் எம்மை
அதிகாரம் பண்ணும்
அகங்காரம் கொண்டீர்கள்.
நாம் வந்தேறு குடிகளானோம்
நீங்கள் பூர்வீக குடிகளானீர்
எங்கள் மண்ணில்
நாம் ஏதிலிகளானோம்
நீங்கள் எசமானானீர்

எம்மை
தினமும் கொத்தி தின்னும்
கழுகு கூட்டத்தின்
நடுவே நாங்கள்
பிணங்களானோம்
வீழ்த்தி வெட்ட நீங்கள்
பல படையாய் வந்தீர்
ஒட்டிப் போகும் புல்லிருவிகளுக்குள்ளும்
நாம் தனித்து நின்றோம்
அதனால் தான் நாங்கள்
நிமிர முடியாத விலங்கினமாய்
உம் முதுகை சொறியும்
அசிங்கங்களாய் எம்மையும்
நினைத்துக் கொண்டீர்…

இப்போதெல்லாம்
எமக்கு எம்
ஆண்டவனின் வருகை
தேவைப்படுகிறது
அதிகார முட்களை
வெட்டி எறியும்
கோடரி ஒன்று தேவைப்படுகிறது.

நீங்கள் ஆனந்தபுரத்தில்
மூட்டிய தீ எம்மை எரித்து
நாசமாக்கியதாக நீங்கள்
நினைக்கலாம்
நாங்கள் செத்தழிந்து விட்டதாக
மகிழ்ந்து சிரிக்கலாம்
ஆடுங்கள் மகிழுங்கள்
சிரியுங்கள்…

எம்மை நாம் ஆள
எங்கள் ஆசைகள்
நிறைவாக ஏதோ
ஓர் நாள் எமக்கானதாக
எழுதப்பட்டிருக்கும்
அப்போது எத்தனை
ஆனந்தபுரங்களை நீங்கள்
தருவீர்கள் என்று பார்ப்போம்
அத்தனை ஆனந்தபுரங்களையும்
எம் முதுகில் சுமப்போம்

கவிமகன்.இ

Allgemein