‛13’இல் டில்லி தளர்வுப்போக்கு; ரணில் கூறுகிறார்

இலங்கையிலுள்ள சகல மாகாண சபைகளுமே அதிகளவு அதிகாரத்தை விரும்புகின்றன எனவும், இந்நிலையில் கொழும்பிலுள்ள பாராளுமன்றத்திற்கும் சகல மாகாண சபைகளுக்குமிடையிலேயே தற்போதைய தருணத்தில் பிளவுகள் இருப்பதாக தென்படுவதாகவும் இது வெறுமனே தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான விவகாரம் அல்ல என்றும் மத்திக்கும் சுற்றயல் கூறுகளுக்கும் இடையிலான பிரச்சினை எனவும் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக புதுடில்லி நெகிழ்வுத் தன்மையை கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
“சர்வதேச தலைமைத்துவமொன்றாக உலகம்‘ என்ற தொடரின் அங்கமாக டபிள்யூ. ஐ.ஓ.என்.னின் சிரேஷ்ட சர்வதேச நிருபர் பத்மா ராவ் சுந்தர் ஜி க்கு அளித்த பேட்டியின் போது இதனைத் தெரிவித்திருக்கும் பிரதமர் சீனா, அமெரிக்காவுடனான உறவுகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள்,  இலங்கை  இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தபபட்ட 13 ஆவது திருத்தத்தின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறார். பேட்டி வருமாறு;
கேள்வி: 1987 இலங்கை  இந்திய ஒப்பந்தம் குறைந்தது இரு விடயங்களில் இப்போதும் புதுடில்லிக்கு பொருத்தமானதாக தென்படுகின்றது. அதில் முதலாவது விடயமாக இலங்கைத் தமிழர்களுக்கான அதிகபட்ச சுயாட்சி உறுதிமொழி தொடர்பான விவகாரம் அமைந்திருக்கிறது. உங்களின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்டதொன்றாக இருக்கின்றது. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு இந்தியா இணைந்து கைச்சாத்திட்டிருந்தது. ஆனால், அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகச் சிறிதளவு முன்னேற்றமே எட்டப்பட்டிருப்பதாக உங்களின் சொந்தத் தமிழர்கள் கூறுகின்றனர். உங்களின் அரசாங்கத்தால் கூட சிறிதளவு முன்னேற்றமே எட்டப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உங்களின் நாட்டின் தென்பகுதியில் உள்ள பல இலட்சக் கணக்கான இலங்கை சிங்களவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர். 30 வருட காலத்தைக் கொண்ட இந்தத் திருத்தம் இப்போது காலம் கடந்த ஒன்றாக இருக்கின்றதா அதில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதா?
பதில்:  உண்மையில் இல்லை. புதிய அரசியலமைப்பை வரைவதற்கான அரசியலமைப்பு நிர்ணய சபையை நாங்கள் கொண்டுள்ளோம். தற்போதைய தருணத்தில் வழிகாட்டல் குழு இருக்கின்றது. நாங்கள் அதிகாரப் பகிர்வு குறித்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாகாண சபையுமே அதிகளவு அதிகாரத்தை விரும்புகின்றது என்பதை நான் உங்களுக்கு கூற முடியும். தற்போதைய தருணத்தில் கொழும்பிலுள்ள பாராளுமன்றத்திற்கும் சகல மாகாண சபைகளுக்கும் இடையில் அதிகளவு பிளவு இருப்பதாக தோன்றுகிறது. இது வெறுமனே தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான விவகாரம் அல்ல, இது மத்திக்கும் சுற்றயல் கூறுக்கும் இடையிலான விவகாரம்.

ஆனால், எதனை வழங்க முடியும் என்பது தொடர்பாக நாங்கள் யதார்த்த பூர்வமானவர்களாக இருக்க வேண்டும். ஆகவே நாங்கள் அது பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் ஜனநாயக நாடொன்றாக உள்ளோம்.
கேள்வி: 13 ஆவது திருத்தம் பற்றி புதுடில்லியும் தளர்வுப் போக்கை கொண்டிருப்பதாக உள்ளதே? 
பதில்: ஆம். அங்கு எப்போதுமே தளர்வுப் போக்கு உள்ளது. நாங்கள் அதனை மெச்சுகின்றோம்.
கேள்வி : உடன்படிக்கையின் மற்றைய அம்சமாக விளங்கும் விடயம் இந்தியாவுக்கு பொருத்தப்பாடானதாக இருக்கின்றதே திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அங்கு சுதந்திர வர்த்தக வலயத்தை கொண்டிருப்பதற்குமான வழங்கப்பட்ட உரிமை விவகாரம் காணப்படுகிறது. ஆனால், ஏற்கனவே சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சுர்பனா யாரொங் கம்பனிக்கு அந்த அபிவிருத்தியை வழங்கியிருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்? மேலும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 31 எண்ணெய்க் குதங்கள் தொடர்பாகவும்  இணக்கப்பாடின்மை காணப்படுகின்றது. 2003 இல் கைச்சாத்திடப்பட்ட மற்றொரு இரு தரப்பு உடன்படிக்கையின் மூலம் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு அந்த எண்ணெய்க் குதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அச்சமயமும் நீங்களே பிரதமராக இருந்துள்ளீர்கள். இப்போது உங்கள் அரசாங்கம் அவற்றை திரும்ப வழங்குமாறு கேட்கின்றதே?
பதில்: நீங்கள் யாவருமே காலத்திற்கு பின்னால் உள்ளவர்கள். திருகோணமலை துறைமுகம் இலங்கைத் துறைமுகமாக உள்ளது. இந்திய  இலங்கை உடன்படிக்கையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தப்பான எதனையும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறியி>ருந்தோம். சுர்பனா யாரென் திருகோணமலையில் நகரத் திட்டமிடுபவர்களாக உள்ளனர். உங்களின் அமராவதி போன்றதாகும்.

உண்மையில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் நானும் அந்தக் கம்பனி எவ்வளவுக்கு நல்லதென குறிப்பிட்டிருந்தோம். ஆதலால், நாங்கள் எவரை விரும்புகின்றோமோ அவருடன் செயற்பட முடியும். திருகோணமலை தொடர்பாக திட்டமிடுவதற்கும் செயற்படவும் முடியும்.  ஆந்திரப் பிரதேசத்தைப் போன்று திட்டமிடுவதில் நாங்கள் ஈடடுபட வேண்டியிருந்தது. இந்திய சுதந்திர வர்த்தக வலயத்தைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவை வரவேற்பதாக கூறியிருந்தோம்.

இந்தியாவின் பகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை தயாராக உளளன. நாங்கள் சுதந்திர வர்த்தக வலயத்தை கொண்டிருப்பதற்கு விரும்புகிறோம். அது இந்தியாவாக சில சமயம் இருக்கலாம். அல்லது வேறொரு நாடாக இருக்கலாம். அங்கு ஹோட்டல்களை செயற்படுத்த முடியும். இப்போது  திட்டமிடப்படும் வலயமாக அது உள்ளது. தொழிற்துறைகள் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், சுற்றுலாத் துறை எங்கே அமைய வேண்டும் என்பது குறித்தும், எவ்வாறு நாங்கள் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது குறித்தம் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அதன் அங்கமாக வருமாறு ஜப்பானியர்களையும் நாங்கள் கேட்கின்றோம். இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் தற்போது சுத்திகரிப்பு வசதி தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கூட்டாக செயற்படுவது தொடர்பாக ஆராய்கின்றது. அதன் பின்னர் எம்மால் பெற்றோலியத்தை சுத்திகரித்து இந்தியாவிற்கும் ஏனையவர்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும்.

அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் போது எண்ணெய் குதங்கள் பற்றி நாங்கள் அறிந்து கொள்வோம். ஆனால், எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பாக இரு அரசாங்கங்களுக்குமிடையில் தீர்வு காணப்பட்ட விடயங்களில் தொடர்ந்தும் விவகாரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
கேள்வி: இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் சகலதும்  திருப்தியாக இருப்பதாக  நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அதில் ஒன்றாகும். ஆனால், அது தொடர்பாக முரண்பட்ட விடயங்களும் இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றவே. பிரதானமாக இந்தியாவின் பல இலட்சக் கணக்காணோர் இலங்கைத் தீவை ஆக்கிரமித்து உங்களின் சகல தொழில்வாய்ப்புகளையும் எடுத்துக் கொள்வார்கள் என இலங்கையர்களின் மனங்களில் அச்ச உணர்வு காணப்படுகின்றதே. சீனாவுடனான உங்களின் உறவின் ஊடாக என்ன நடக்கின்றது என்பது சரியாக தென்படுகின்றதே. சீனர்கள் ஏற்கனவே உங்களின் சிறிய தீவெங்கும் பிரசன்னமாகி அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சீனக் கம்பனிகளில் இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். தாங்கள் சீன மொழியை கற்பதற்கான கடப்பாடு இருப்பதாக கூறுகின்றனர்.  ஆனால், அது இலங்கையின் தொழிற் சட்டங்களில் இல்லை. இலங்கையில் பாதி காலணிமயப்படுத்தல்  சீனாவினால் முன்னெடுக்கப்படுவதாக உங்கள் நாட்டிலுள்ள விமர்சிப்போர் கூறுகின்றனர்.  இதில் நகைமுரணான விடயமாக அமைந்திருப்பது, சீனா  இலங்கையுடன் இந்தியா கொண்டிருப்பதைப் போன்ற கலாசார, மொழி, வரலாறு, மதம் என்ற பிணைப்புகளைக் கூடக் கொண்டிருக்கவில்லையே?
பதில்: இந்த விடயங்களுக்காக சீனாவை நாங்கள் கொண்டு வர வேண்டியுள்ளதென நான் நினைக்கவில்லை. இங்கோ அங்கோ சீனர்களில் அதிக பிரசன்னம் இல்லை. அதிகளவு இந்தியர்களே உள்ளனர்.

ஆனால், இறுதியாக  சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில்  இங்கு குறிப்பிட்ட நான்கு விடயங்களும் அடங்கியிருக்கவில்லை. இந்தியாவோ அல்லது வேறு நாடாக இருந்தாலும் இந்த விடயங்கள் அடங்கியிருக்கவில்லை.

இந்தியாவுடன் வழமையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், சீனாவுடனும் சங்கப்பூருடனும் அவை இடம்பெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்துள்ளோம். அடுத்த சுற்றில் பிரவேசிக்கவுள்ளோம்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழுள்ள எதிரணிப் பிரிவு உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது இலங்கை ஆயுதப் படையினரால்  மீறுப்பட்டதாக தெரிவிக்கப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான தீர்மானத்தில்  அமெரிக்காவுடன் இணைந்து கைச்சாத்திட்டுள்ளது குறித்து கவலை தெரிவிக்கின்றது. வெளிநாட்டவர்களை அந்த விசாரணையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கொழும்பு அதிகளவுக்கு முன்தள்ளப்படுமென தொடர்ந்தும் சாதாரண இலங்கையர்கள் மத்தியில் பரந்தளவில் சந்தேகம் காணப்படுகின்றது.  பல தசாப்தங்களாக பிரிவினைவாத புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்து போசித்த நாடுகள் பலவற்றுடன் சாத்தியமான அளவுக்கு கொழும்பு எவ்வாறு கரங்கோர்க்க முடியும்?
பதில்:   ஆம். 2015 30/1 தீர்மானத்திற்கு நாங்கள் இணை அனுசரணை வழங்கியிருந்தோம். விடயங்களுக்குத் தீர்வு காண மேலும் இரு வருடங்களைப் பெற்றிருக்கின்றோம். அந்தத் தீர்மானத்தில் வெளிநாட்டு நிபுணத்துவத்தை நாங்கள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு உள்ளது.
சட்ட ரீதியான நீதிபதிகள் போன்ற நிபுணத்துவத்தை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இங்கு நாங்கள் தேவையானது குறித்தே சிந்திக்கின்றோம். ஆனால், இந்தியாவைப் போன்று இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளின் அமர்வில் பங்கேற்க முடியாது. இந்தியா உட்பட சகல தெற்காசிய நாடுகளைப் போன்று கொள்கை தொடர்பான விடயங்களில் இலங்கை ரோமிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ளமாட்டாது.
கேள்வி: விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் கோபி மற்றும் அவரின் ஆட்களும் கணிசமானளவு ஆட்களும் வட மாகாணத்தில் கைப்பற்றப்பட்டனர். அண்மையில்  உங்களின் மிதவாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்வதற்கான சதி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.  இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் மேலெழுகின்றனரா? அல்லது உங்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கம் செய்வதாக நீங்கள்  அடிக்கடி குற்றம் சாட்டப்படுவது போன்று இவை வதந்திகளா? முன்னைய யுத்த வலயங்களில் யுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்கள் கடந்தும் கூட ஆயுத சக்தளின் பிரசன்னம் தொடர்ந்து  இருக்கின்றது என்பதை நியாயப்படுததுவதற்கான வெறும் வதந்திகளா?
பதில்:  விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். ஏனையவர்களை சிறிய குழுக்கள் பயன்படுத்தக்கூடும். வடக்கில் உள்ள இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: முன்னாள் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா தமிழ் சுதந்திரக் கட்சியை மட்டக்களப்பில் அமைத்துள்ளார். மற்றொரு முன்னாள் புலி உறுப்பினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியை திருகோணமலையில் ஆரம்பித்திருக்கிறார். பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான 30 வருட யுத்தத்தின் பின்னர் 120,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறைமை மற்றும் ஒன்றுபட்ட இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவானது எவ்வாறு தொடர்ந்தும் தமிழர் விடுதலை, “விடுதலைப் புலிகள் என்ற சொற்களைக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யும் சாத்தியம் உள்ளது?
பதில்:  சிலரால் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இது தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்த விடயமாகும். தடை செய்யக்கூடிய வார்த்தைகள் இல்லை. ஒரு கட்டத்தில விடுதலைப் புலிகள் என்பது தடை செய்யப்பட்ட பெயராக இருந்தது.
கேள்வி: இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தின் கேந்திர உபாய முக்கியம் குறித்து நீங்கள் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். ஆனால் ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பல கூட்டாக கிரமமான முறையில் கடற்படை பயிற்சிகளை இங்கு நடத்துகின்றன. அம்பாந்தோட்டையில் அவ்வாறான ஒன்று நிறைவடைந்துள்ளது. நான் குறிப்பிட்ட இந்த மூன்று நாடுகளும்  சீனாவுடன் ஆட்புல மற்றும் ஏனைய சர்ச்சைகளை கொண்டிருக்கின்றன. சீனா இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அதன்  ஒரே அணி ஒரெ பாதை, முன் முயற்சியில் இலங்கை அங்கமாக உள்ளது. உங்களின் நீண்ட அரசியல் அனுபவத்திலிருந்து பிராந்தியத்தின் எதிர்காலத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்? ஒத்துழைப்பு ? அல்லது முரண்பாடு? 
பதில்:  அங்கு ஒத்துழைப்பு இருக்குமென நான் நினைக்கிறேன்.
கேள்வி: சகல நாடுகளுக்குமிடையிலா?
பதில்: ஆம்.
கேள்வி: இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கியதா?
பதில்:  ஆம்.  இந்தியாவுக்கும் சீனாவ>க்கும் இடையில் ஏற்கனவே ஒத்துழைப்பு உள்ளது.
கேள்வி: இலங்கையின் தற்போதைய கூட்டணி அரசாங்கம் 2015 இல் அதிகாரத்திற்கு வந்தது. நெருங்கிய அயலவரான இந்தியாவுடன உறவுகளை மேம்படுத்துவதாக உறுதிமொழி அளித்திருந்தது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னைய அரசாங்கத்தின் கீழ் உறவுகள் முடங்கியிருந்தன. தொடர்ச்சியாக உயர்மட்ட விஜயங்களும் நல்லெண்ண சமிக்ஞைகளும் காணப்படுகின்றன. ஆனால் அடிப்படை விவகாரங்கள் சில தீர்வு காணப்படாமல் முடங்கியிருக்கின்றன. உதாரணமாக சீனாவுடனான கொழும்பின் நெருக்கம் அதிகரித்து வருகிறது. இது கேந்திர அச்சுறுத்தலாக நோக்கப்படுகிறது. புதுடில்லிக்கு மீளுறுதி அளிப்பதற்கு தங்களின் அரசாங்கம் என்ன செய்கிறது?
பதில்: நாங்கள் எப்போதும் சீனாவுடன் நட்புறவை கொண்டுள்ளோம்.  ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பானதாக அல்ல. பல நாடுகளுடன் நாங்கள் நற்புறவுடன் உள்ளோம். ஆனால், ஏனையவர்களுக்கு பாதிப்பாக அல்ல. சீனாவுடனான எமது உறவு இந்தியாவுடனான உறவுடன் வேறுபட்டது. இந்தியா தொடர்பாக எமது உறவை நீங்கள் பார்த்தால் கவலைப்படுவதற்கு  எதுவும் இல்லை.

சீனா அல்லது பிரிட்டன் எவருடனும் நாங்கள் மேற்கொள்ளும் விடயங்கள் குறித்து அதிகளவுக்கு கவலைப்பட தேவையில்லை. எம்மைப் பொறுத்தவரை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் என்ன நடக்கின்றது என்பது பற்றி புரிந்து கொண்டுள்ளன.

நாங்கள் நெருக்கமாக முன்னகர்ந்து கொண்டிருக்கின்றோம். சில அசௌகரியங்கள் இருக்குமானால் அது இந்திய ஊடகம் தமது கருத்தில் செய்திகளை வெளிவிடுவதாகும். அது தொடர்பாக நான் செய்யக்கூடியது எதுவும் இல்லை.  நாங்கள் சிறப்பான பாதுகாப்பு உறவுகளை கொண்டிருக்கின்றோம்.

பொருளாதார உறவுகளை கொண்டிருக்கிறோம். ஜப்பானுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கையின் முயற்சியில் இந்தியா எவ்வாறு பங்கேற்க முடியும் என்பது குறித்து நாங்கள் பார்க்கின்றோம். இதனை சிங்கப்பூர் கம்பனியான  சுர்பனா யாரென்  திட்டமிடுகிறது. அந்தக் கம்பனி இந்தியாவின் அமராவதி தொடர்பாகவும் செயற்படுகிறது.
கேள்வி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தங்களின் தனிப்பட்ட உறவுகள் எவ்வாறானது?
பதில்: அவரை எனக்கு நீண்டகாலமாக தெரியும். உண்மையில் குஜராத் முதலமைச்சராக இருந்த போதே நான் தொடர்புகளை கொண்டிருந்தேன். பிரதமர் வேட்பாளராக விளங்குவாரென எவரும் நினைத்திருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் நட்புறவுகளை பேணி வருகின்றோம்.

Allgemein