இலங்கையை தொடர்ந்து இந்திய கப்பல் கடத்தல்: சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்

11 பணியாளர்களுடன் சென்ற இந்திய சரக்கு கப்பலை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய ஆமீரகத்தின் துபாய் துறைமுகத்தில் இருந்து ஏமன் நாட்டுக்கு சென்ற Al Kaushar என்ற இந்திய சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்த மாதம் 1 ஆம் திகதி கடத்தியுள்ளனர்.

குறித்த கப்பலில் இந்தியாவின் மும்பை பகுதியை சேர்ந்த 11 பணியாளர்கள் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்ட கப்பலின் சாரதி குறித்த தகவலை துபாய் அதிகாரிகளுக்கும் கப்பலின் உரிமையாளருக்கும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உரிய அதிகாரிகள் கடத்தப்பட்ட கப்பலை எவ்வித சேதாரமும் இன்றி மீட்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 13 ஆம் திகதி இதேபோன்று இலங்கையை சேர்ந்த எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று பெருந்தொகை கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

குறித்த கப்பலில் இருந்த பணியாளர்களையும் பிணைக்கைதிகளாக்கினர். இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்கொள்ளை தடுப்பு பிரிவினர் களத்தில் இறங்கி கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் கப்பல் விடுவிக்கப்பட்டது.

Allgemein