ஆனந்தபுரம்: நஞ்சுண்ட வீரம்

 

ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில்
சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றில்
ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க
உயிரை வேலியாக நிலத்தில் ஊன்றி
தடுத்து நின்றனர் போராளிகள்

வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை
அலங்கரிக்கும் கனவு வீரர்களின்
கருணையான முகத்தை
அன்புறைந்த வார்த்தைகளை
சனங்களுக்காய் களமாடும் வீரத்தை
கடக்க முடியா நஞ்சு

தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின்
கனவுகளால் பச்சை நிறமானது நிலம்.

பொறிக்குள் வைக்கப்பட்டிருந்த எல்லா வகையான
தந்திரங்களையும் முறியடிக்க
நெடுநேரம் போராடினார்
சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட
நஞ்சு வலயத்தில் காற்றுக்குத் தவித்தனர் குழந்தைகள்

மரணத்தின் நிழல் வீசியது எங்கும்

பறவைகள் முட்களுக்குள் மாட்டுண்டு துடிப்பதுபோல
குழந்தைகள் கிடங்குகளில் விழுந்து
மீள முடியாது தவிப்பதுபோல
மான்குட்டிகள் பொறிக்குள் பரிதாபமாக சிக்குண்டு
உயிரை இழப்பதுபோல
நஞ்சுக் குண்டுகள் எல்லாவற்றையும் உறிஞ்சியது

உயிர்கள் எரிய
காடு துடித்தது.

நஞ்சுப் பொறியில் நிலம் அகப்பட்டிருக்க
கனவு நிரம்பிய விழிகளோடிருந்த குழந்தைகளுக்கு
நஞ்சை பருக்கையில்
அதை தாமருந்தினர் கனவு சுமந்த போராளிகள்

கனவு மிகுந்த புன்னகையில்
இலட்சியம் நிறைந்த பார்வையில்
விடுதலையின் பேராவலில்
வளர்த்தெடுக்கப்பட்ட வீரத்தில்
சூழ்ச்சியால் வீசப்பட்ட நஞ்சு
நனைத்தது உடலை மாத்திரமே

தீபச்செல்வன்

Allgemein