ஜெனீவா கைவிரிப்பானது காத்திருப்பிற்கானதன்று; களமாடுவதற்கான ஆணையே! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழினவழிப்பின் மைய்ய சூத்திரதாரியான சிறிலங்கா அரசிற்கு அது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியுள்ளமையானது, நாம் அதுவரை காத்திருப்பதற்கானதன்று களமாடுவதற்கான ஆணையே என்பதை உலகத் தமிழர்கள் உணர்ந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
சூரியனின் மறைவை காணாத வகையிலான இராச்சியப் பெரும் பரப்பை தனது ஆளுகைக்குள் கொண்டிருந்த பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஒருதலைப்பட்சமான ஆட்சி, அதிகாரக் கையளிப்பு இலங்கைத் தீவில் நிகழ்ந்த நாள் முதல் தமிழர்களின் தன்னுரிமைப் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தே வருகிறது.
தமிழர்களின் பெரும் பலமாக திகழ்ந்துவந்த தமிழீழ விடுதலைப் போராட்டமானது பயங்கரவாதத்தின் பெயரால் அழித்தொழிக்கப்பட்ட பின்னணியில் மாபெரும் மனிதப்படுகொலை அரங்கேற்றப்பட்டிருதது. பிராந்திய, உலக வல்லாதிக்க நலன்களுக்குள் லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது மட்டுமன்றி அதற்கான நீதியும் அதே காரண காரியங்களை முன்னிறுத்தி தடுத்து தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும் தமிழர்களின் தன்னுரிமைப் போராட்டம் அறவழியில் தொடர்ந்து வருகின்ற சூழலில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் நீதிப்படுகொலையானது ஒருவித முடக்க நிலையை ஏற்படுத்திவிட்டதான உளவியல் சோர்வுநிலைக்குள் தமிழர்களை இட்டுச்சென்றுள்ளது மறுக்கமுடியாத உண்மையாகும்.
முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழர்களின் நீதி வேண்டிய உரிமைப்போராட்டத்தின் மைய்யப்புள்ளியாக ஜெனீவா திணிக்கப்பட்டிருந்தது. விரும்பியோ விரும்பாமலோ ஜெனீவா நோக்கியதாகவே உலகத் தமிழர்களின் போராட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழமைவில்தான் இனப்படுகொலை அரசிற்கான காலநீடிப்பு தீர்மானம் தமிழர்களை உளவியல் சோர்விற்குள்ளாக்கியுள்ளது.
அன்பார்ந்த தமிழ் மக்களே!
இதுவே முடிந்த முடிவு கிடையாது. நாம் தொடர்ந்தும் கடுமையாக போராட வேண்டுமென்பதன் அறைகூவலாகவே ஜெனீவாவில் நிகழ்ந்த நீதிப்படுகொலை அமைந்துள்ளது. தமிழர் தாயகத்தின் பேரெழுச்சியில்தான் எமக்கான விடிவு தங்கியுள்ளது. தமிழர் தாயகத்து மக்களின் பேரமைதி நிலையே சம்பந்தன்-சுமந்திரன் வகையறாக்களின் கூற்று சபையேறக்காரணமாகும்.
அண்மைக்காலமாக தாயகத்து மக்கள் தமது பேரமைதியைக் கலைத்து மேற்கொண்டுவரும் உரிமைகளை முன்னிறுத்திய போராட்டங்களின் மூலம் சம்பந்தன்-சுமந்திரன் வகையறாக்களின் எதேச்சதிகாரத்தை ஆட்டம்காணச் செய்துள்ளார்கள். இந்நிலை மேலும் வலுவடைவது ஒன்றே இன்றைய தேவையாக உள்ளது.
தாயகத்தில் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்படும் போராட்டங்களே புலம்பெயர் செயற்பாட்டுக் களத்தை அர்த்தமுள்ளதாக்கும். இதுவரை தாயகத்தில் பேரமைதி நிலவிவந்தமையால் புலம்பெயர் செயற்பாட்டுக் களத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தன்-சுமந்திரன் வகையறாக்களின் துரோகத்தனத்தால் வலுவிழக்கச் செய்யப்பட்டது.
ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இனவழிப்பு நாடாகிய சிறிலங்காவிற்கு சாதகமான முறையில் காலநீடிப்பு வழங்கப்பட்டமைக்கு சம்பந்தன்-சுமந்திரன் வகையறாக்களின் அடிபணிவு அரசியலின் வெளிப்பாடான தமிழர் விரோத செயற்பாடே காரணமாகும். இவர்களின் குரல்களை வாக்களித்த மக்களின் குரலாகவே உலகம் பார்க்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ இந்த மகாபாதகர்களை உங்கள் பிரதிநிதிகளாக்கிவிட்டீர்கள். அதன் விளைவுகளை இன்று நாம் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். அதை சரிசெய்யும் வகையில் அவர்களை ஓட ஓட விரட்டியடிப்பதுடன் அறவழியில் போராட்டங்களை முழு வீச்சுடன் தொடர்வது ஒன்றே எம் முன்னால் இருக்கும் ஒரே வழியாகும்.
• கையளிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் நிலை என்ன…?
• உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் வல்வளைப்பு செய்யப்பட்டிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு எப்போது விடுதலை…?
• அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது…?
• சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவலம் எப்போது முடியும்…?
• கல்வி, வேலைவாய்ப்பில் தொடரும் புறக்கணிப்புக்கு தீர்வு என்ன…?
• இளைஞர், யுவதிகளை குறிவைத்து அரங்கேற்றப்பட்டு வரும் சமூகவிரோத செயற்பாடுகளுக்கு முடிவுரை எழுதுவது யார்…?
• தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு-கலை-கலாச்சாரம் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகின்றமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்…?
• மது-போதைப்பொருள் ஆக்கிரமிப்பிற்குள் வளரும் தலைமுறையை பலிகொடுக்கும் அவலத்திற்கு முடிவு வேண்டாமா…?
• இனவழிப்பு இராணுவத்தின் கொலை நிழலில் இன்னும் எத்தனை நாள் வாழப்போகின்றோம்…?
மண்ணுறங்கும் மாவீரர்கள் எமது தோள்களில் கடத்திச்சென்ற வரலாற்றுக் கடமையை நாம் ஒருபோதும் கீழிறக்கி வைக்க முடியாது. உலக விடுதலைப் போராட்டங்களில் முதன்மையானதாய் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அரியணையேற்றிய உங்களால் இந்த அவலங்களை வென்று வரலாறு படைக்க முடியும். வெல்லும் வரை ஓயோம் என்ற உறுதியுடன் உரிமைப் போராட்டத்தின் அணியமாகுங்கள். வெற்றி நமதே!
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்;
மீண்டும் தர்மமே வெல்லும்!’
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
Allgemein