வீழ்ந்துபோன பெருவிருட்சம் மாமனிதர் ஜெயக்குமார்

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மேற்குலக நாடுகளிலிருந்து கொண்டு வலுச்சேர்த்தவர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார்

இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

29.03.2007 அன்று வியாழக்கிழமை அதிகாலை திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் மெல்பேணில் அவரது வீட்டில் தனது 56 ஆவது வயதில் அகால மரணமடைந்தார். இறப்பின்பின் தமிழீழத் தேசியத்தலைவரால் தமிழீழத்தின் அதியுயர் விருதான ‘மாமனிதர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தனது இருபதுகளில் இங்கிலாந்து சென்று பொறியியற்றுறை உட்பட்ட பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்து தாயகம் திரும்பினார். பின் 1982 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். அதன்பின் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் தங்கிவிட்டார். 1984 இல் திருமணம் முடித்தார். மகனொருவர் இருக்கிறார்.

அவுஸ்திரேலியாவிலிருந்த ஈழத்தமிழர்களை ஒருங்கிணைப்பதிலும், ஈழப்போராட்டத்தோடு மக்களை ஒன்றிக்க வைப்பதிலும் அயராது உழைத்து உறுதியான கட்டமைப்பொன்றை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தினார். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி, ஏற்கனவே இருந்த அமைப்புக்களை ஒருகுடையின்கீழ் ஒருங்கமைத்து, சாகும்வரை அயராது உழைத்தவர் இவர். அவுஸ்திரேலியா மட்டுமன்றி நியூசிலாந்து உட்பட்ட தென்துருவ நாடுகள் அனைத்திலும் தமிழர் அமைப்புக்களின் உருவாக்கத்துக்கும் அவற்றின் ஈழப்போராட்டச் செயற்பாட்டுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. இன்று தென்துருவப் பகுதியில் ஈழத்தவரின் அரசியல் அமைப்புக்கள் வலுவாகவும் செயற்றிறன் மிக்கனவாகவும் இருக்கிறதென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் அயராத உழைப்பிலும் வழிகாட்டலிலும் வந்த வளர்ச்சியே.

மற்றநாடுகளின் புலம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும்போது தென்துருவ ஈழத்தவர்களின் புலப்பெயர்வு வித்தியாசமானது. தொடக்கத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் இருக்கவில்லை. படித்த, மேல்தட்டு வர்க்க யாழ்ப்பாணத்தவர்களே பெரும்பாலானவர்கள். அதுவும் இனப்பிரச்சினை கூர்மையடைய முன்பே புலம்பெயர்ந்தவர்கள் பலர். பின்னர்தான் படிப்படியாக – அதுவும் மற்றநாடுகளோடு ஒப்பீட்டளவில் மிகக்குறைவாக ஈழஅகதிகள் தென்துருவத்துக்குப் புலம்பெயர்ந்தனர். எண்பதுகளின் தொடக்கத்தில் இப்பகுதியில் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதில் இருந்திருக்கக்கூடிய சிக்கலை, கடினத்தன்மையை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். அந்தநேரத்திலும் சரி இப்போதும் சரி அவுஸ்திரேலியாவில் சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளநிலையில், அதுவும் ஜே.வி.பியின் தீவிர ஆதரவுத்தளமாக இருக்கும் நிலையில், அரசியல் மட்டத்தில் மிகநெருக்கமான தொடர்புகளையும் பரப்புரைகளையும் சிங்களவர் பேணிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவை மிகப்பெரிய சிக்கலுக்குரிய விடயம்தான். ஆனாலும் திரு. ஜெயக்குமார் அவர்கள் திறமையாக அதைச்செய்தார். கல்விச் சமூகத்தை ஈழப்போராட்டத்துக்கு உறுதுணையாக்கினார்.

பல்கலைக்கழகமொன்றில் முழுநேர விரிவுரையாளராகத் தொழில்புரிந்தார். அதைவிட ஈழப்போராட்டத்துக்கான தனக்குரிய பணியை மேலதிகமாகச் செயதார். அவுஸ்திரேலியா என்று எடுத்துக்கொண்டாலே ஒவ்வொரு மாநிலத்துக்குமான பயணத்தூரம் மிகமிக அதிகம். அதைவிட நியூசிலாந்து, பீஜி, மொறீசியஸ, மலேசியா என்று தனது பணிக்குரிய இடங்கள் அனைத்துக்கும் இடைவிடாது பயணம்செய்து தன்பணியைச் சிறப்புற ஆற்றினார். பயண அலைச்சல்களிலேயே அவர் பலநாட்களைக் கழித்தார்.

2004 ஆம் ஆண்டு ஆசியாவைத் தாக்கிய ஆழிப்பேரலையில் தமிழீழமும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. உலகத்தின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட பகுதியாக அது இருந்தது. சரியான முறையில் உலக உதவிகள் சென்று சேரவில்லை. தமிழீழம், ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து மீண்டது அதன் தளத்திலும் புலத்திலிருமிருந்த தமிழர்களால்தான். அந்த அனர்த்த நிவாரணப்பணியில் முக்கிய பாத்திரம் திரு. ஜெயக்குமார் அவர்களுக்குமுண்டு.

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்தபோது திரு ஜெயக்குமார் அவர்கள் தாயகத்தில்தான் நின்றார். உடனடியாகவே களத்திலிருந்து துரிதமாகச் செயற்பட்டார். துருவப் பகுதியிலிருந்து மருத்துவ உதவி, தொண்டர் சேவை, பொருளுதவி என்பவற்றைத் திரட்டி தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தி உதவிகளை உரியமுறையில் விரைவாகக் கிடைக்கும்டி நடவடிக்கையெடுத்தார். அவரின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளின் ஒருபகுதி சிறப்பாக நடைபெற்றது.யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாயகப்பகுதியில் தமது புலமையைப் பகிர்ந்திருந்தனர். நுட்பியல் கற்கை நெறிகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த புலமையாளர்கள் கலந்துகொண்டு கற்பித்தார்கள். அவ்வகையில் தென்துருவ நாடுகளில் இருந்தும் கணிசமான பங்களிப்பு வழங்கப்பட்டது. திரு. ஜெயக்குமார் அவர்கள் இவற்றை ஒருங்கிணைத்துச் சரிவரச் செய்திருந்தார். பலநவீன நுட்பங்களைத் தாயகத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் பெரும்பங்காற்றினார். (காகம் இருக்கப் பனங்காய் விழுந்த கதையாக, இவர்தான் புலிகளுக்கு விமானத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தார் என்று ஏசியா ரிபியூன் உட்பட்ட புலியெதிர்த்தரப்பு இப்போது புலம்பிக்கொண்டிருப்பது வேறுகதை)தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இவர்மேல் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார் எனபதை இவரின் இறப்பின் பின்னான கதைகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும். இவரது இறுதி வணக்க நிகழ்வில் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வன்னியிலிருந்து வழங்கிய இரங்கலுரையை ஒளிபரப்பினார்கள். அவற்றில் திரு ஜெயக்குமார் அவர்களின் இழப்பு அவர்களிடத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை உணரமுடிந்தது.திரு. ஜெயக்குமார் அவர்கள் ஓர் இசைக்கலைஞனும்கூட. எண்பதுகளின் தொடக்கத்தில் “மெல்பேண் மெல்லிசைக்குழு” என்ற பேரில் ஈழத்து இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழுவில் திரு. ஜெயக்குமார் அவர்கள் கிட்டார் வாத்தியக்கலைஞராகப் பங்காற்றினார். (ஆட்கள் மாறிவந்தாலும் இக்குழு இப்போதும் செயற்றிறனுடனுள்ளது).

திரு. ஜெயக்குமார் அவர்களின் வாழ்வில் சகமனிதர்களுக்கு இணையாக நீங்கா இடம்பெற்றவை மீன்கள்.

மீன்வளர்ப்புப் பைத்தியம் என்றே சொல்வார்கள். தனது நாலாவது வயதில் ஹோர்லிக்ஸ் போத்தலொன்றில் மீன் வளர்த்தது தொடக்கம் இறக்கும்வரை மீன்கள்! மீன்கள்! மீன்கள்! என்றே வாழ்ந்தார்.

இவருக்கு நெருங்கியவர்களின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் தனது பாடசாலைக் காலத்தில் ஐந்து மீன்தொட்டிகள் வைத்திருந்தவர், இங்கிலாந்தில் பொறியியற்றுறையில் பட்டப்படிப்பு முடித்துத் தாயகம் திரும்பும்போது முப்பது மீன்தொட்டிகளில் பல அபூர்வ வகை மீன்களை வளர்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மெல்பேணில் அவரது இறுதிக்காலம்வரை மீன்கள் வளர்த்து வந்தார்.

சிறந்த நிர்வாகி. அதிர்ந்து பேசாதவர். எந்நேரமும் ஒரு புன்சிரிப்போடுதான் அவரைப்பார்க்கலாம். பிரச்சினைகளை, கவலைகளை, அழுத்தங்களை வேறுயாருக்கும் காட்டிக்கொண்டதில்லை. ஈழப்போராட்ட அரசியலில் இயல்பாகவே எதிர்த்தரப்பினரிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்கள், கேலிகள், ஆத்திரமூட்டும் செயற்பாடுகள், விமர்சனங்கள் என்பவற்றைப் பொறுமையாகவே எதிர்கொண்டார். எச்சந்தர்ப்பத்திலும் ஆத்திரப்பட்டோ நிதானமிழந்தோ செயற்பட்டதில்லை.

மிகநேர்மையான நல்லமனிதனை, சிறந்த நிர்வாகியை, கடுமையான உழைப்பாளியை, தென்துருவத்தில் ஈழப்போராட்ட அரசியற் செயற்பாட்டுக்கு அத்திவாரமிட்டவரை, அதைத் திறமையாகக் கட்டியெழுப்பியவரை இன்று ஈழத்தமிழினம் இழந்துநிற்கிறது. ஈழப்போராட்டத்தின் புலம்பெயர்தமிழர் செயற்பாட்டுக்கான அத்தியாயத்தில் மாமனிதர் திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு என்றுமே நீங்கா இடமுண்டு.

Allgemein