மறக்கத்தகுமா…? 29.03.2017

முள்ளிவாய்க்கால் கப்பலடி என்று சொல்லப்படுகின்ற பகுதி. தினமும் கிபிராலும் செல்லாலும் நிரம்பி வழியும் இரும்புகளாலும் அந்த பிரதேசமே திணறிக் கொண்டிருந்த நாட்கள் இவை. காயப்பட்ட போராளிகள் இருவரை அழைத்து கொண்டு அந்த இருட்டுக்கள் நாம் இருவர் கடற்கரையை நோக்கி செல்கின்றோம். கும்மென்ற இருட்டு. முன் நிற்பவரை தெரியவில்லை. அங்கே தங்குமிடங்கள் அமைப்பதற்கே எந்த சந்தர்ப்பங்களும் இல்லை இதற்குள் இயற்கை உபாதைகளை அகற்ற கழிவுக் கிடங்குகளை எப்படி அமைப்பது? அந்த கடற்கரையே கழிவகற்றவும் உணவுண்ணவும் உறங்கவும் சுற்றி சுழலும் வான்கலங்களுக்கும் பாய்ந்துவரும் எறிகணைகளைக்குள்ளும் பாதுகாப்பரணாகவும் இருந்தது. இயற்கை கழிவகற்ற வேண்டும் என்றால் இருட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலை… சிலர் தங்களுடன் கொண்டுவரும் துணியாலான ஒரு மறைப்பை சாத்தி வைத்து அதிகாலை விடியும் முன்னே தமது இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவார். அல்லது இயற்கையின் இருட்டே மறைப்பாக கொள்வர். நாமும் அன்று தேசத்தில் அடிமை இருட்டினால் இயற்கை இருட்டை மறைப்பாக கொண்டு இயற்கை கழிவகற்ற சென்றோம். அவர்கள் இருவரையும் அதற்காகவே அழைத்து வந்தோம். அவர்களால் காலூன்றி நடக்க இயலாது அதனால் எங்கள் கரங்களால் அணைத்த படி அவர்கள் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

கடற்கரை அண்மித்ததும் அடிப்பக்கம் வட்டமாக வெட்டப்பட்டிருந்த நாற்காலியில் அவர்கள் இருவரும் அமர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் இருவரும் கொஞ்சம் தள்ளி நின்று மௌனிக்க போகும் எங்கள் ஆயுதங்களை பற்றி கலந்துரையாடுகிறோம். அப்போது கும்மென்ற இருட்டு சூழ்ந்து கிடந்த அந்த இடம் நோக்கி முல்லைத்தீவு இராணுவ முகாமில் இருந்து, ஏவப்பட்ட பாரா குண்டு அந்த இடத்தையே பகலாக்குகிறது… அந்த இடத்தை இருட்டு சூழ்ந்திருந்த போது எதுவுமே தெரியவில்லை. ஆனால் பரா வெளிச்சம் அங்கிருந்த எங்கள் துயரை வெளிக் கொண்டு வந்தது.

கடற்கரையை பார்த்த நாம் மறுபக்கம் திரும்பி கொள்கிறோம். ஆண் பெண் குழந்தை என்ற பாகுபாடின்றி வரிசையில் இயற்கை கழிவகற்ற குந்தி இருந்தார்கள் எம் மக்கள். ஒரு பெண் பிள்ளை வளரும் வீட்டில் அவள் குளிப்பதற்காக உடை மாற்றுவதற்காக அல்லது அவளுன் மானத்தை காப்பதற்காக என்று குறைந்தது கிடுகால் அமைக்கப்பட்ட தட்டிகளையாவதை கொண்ட என் தமிழினம், அவள் வாழும் வீட்டின் வேலியை கொஞ்சம் உயர அமைத்து அவளின் பாதுகாப்பை உயர்த்திய தமிழினம், பெண்ணுக்கான தனித்துவம்மிக்க பெறுமதியை கொடுத்த தமிழினம் இன்று கடற்கரையில் அருகில் ஒரு இளைஞன் அல்லது அருகில் கணவனல்லாத ஒரு புது மனிதன் நெருக்கமாக இருப்பதை கூட கண்டு கொள்ளாது மனித வாழ்க்கையில் உயிருடன் இருந்து அனுபவிக்க முடியாத அதி உச்ச வலியை அனுபவித்து கொண்டிருக்கிறது.

சீ என்ன வாழ்க்கைடா இது… என்னோடு நின்றவன் அலுத்து கொள்கிறான். காயப்பட்ட போராளிகள் பராவை திட்டி தீர்க்க தொடங்கினர். அப்போது தான் ஒருவர் அவர்களுக்கு அருகில் வருகிறார். தம்பி அறிவில்ல இதுல பொம்புள பிள்ள இருக்கிறது தெரியல்ல…? அவரின் கேள்வி நியாயமானது தான் ஆனால் அந்த இடத்தில் எதுவுமே தெரியாத நிழல்களாகவே நாங்கள் நின்றோம் அதில் ஆண் யார் பெண்யார் எனபதை நாம் எப்படி அறிவோம். பரா வெளிச்சம் இனங்காட்டிய போது அவர் அவர்கள் மீது பாய்ந்து கொள்கிறார். தமக்காக தங்கள் உயிர்களை கூட துறக்க துணிந்தவர்கள் மீது தவறான கணிப்பை காட்டிய அவரிடம் “ அண்ண இந்த கோவத்தை ஆமில காட்டுங்கோ அப்ப இந்த நிலை வந்திருக்காது அண்ண…“ அமைதியாக கூறிய அவர்கள் எங்களை பார்க்க நாமும் அவர்களை தூக்கி கொண்டு வந்த வழி நகர்கிறோம்…

சிங்களவன் எம் உயிரை மட்டுமா அழித்தான்? எம் உயிருக்கு மேலான மானத்தை பெண்மையை கௌரவத்தை மதிப்பை எம் மக்களின் உணர்வுகளை எல்லாமே தின்று ஏப்பம் விட்டான். மலவறையில் இருக்கும் போது பாட்டு பாடினாலே என்ன பழக்கம் இது சத்தம் போடாம இருடா என்று கட்டுப்படுத்தும் என் அம்மாக்கு இன்று கடற்கரையில் என்ன நிலை…?

நினைவுகளை சுமக்க முடியா பாரத்தோடு கவிமகன்.இ

Allgemein