புலிகளை அழித்தவரின் அடுத்த கட்ட முயற்சியால் தொடரும் புலிகள் மீதான அச்சம்!!

ஆட்சியை கவிழ்த்தே தீர வேண்டும் என்ற வகையில் புதுப் பரிமாணத்தில் இலங்கை தற்போது பயணித்துக் கொண்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அதற்கான ஆரம்ப கட்டப் படிகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பல்வேறு செயற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றார்.

அதற்காக மகிந்தவின் முன்னைய கூட்டமாக இருக்கட்டும், அண்மைய கூட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் கூறப்படுவது “யுத்தத்தை வெற்றி கொள்ளச் செய்தது மகிந்தவே”

“மகிந்தவினாலேயே நாடு சுதந்திரம் பெற்றது, புலிகளை அழித்தவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” இந்தக் கருத்தே சாராம்சம்.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற காலி கூட்டத்தில் உரையாற்றிய மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் வாதிகளினதும் கருத்தும் இவை மட்டுமே.

தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒத்த வகையில் கூட்டங்களை நடாத்திக் கொண்டு வரும் மகிந்த தரப்பு, கடந்த கால ஆட்சியில் செய்யப்பட்ட எதனையும் பிரதானமாக கூறவில்லை.

அவர்களின் ஒரே பிரதான வாதம் மகிந்த புலிகளை அழித்தவர் என்பது மட்டுமே. அவரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? இதற்கான காரணம் என்ன?

மக்கள் மத்தியில் இப்போதைக்கு மகிந்த திருட்டு, ஊழல் ஆட்சியை நடத்தியவர் என்ற கருத்து நல்லாட்சியினால் வலுப்படுத்தப்பட்டு விட்டது. மகிந்த கடந்த காலத்தில் செய்த ஊழல்களை படிப்படியாக அம்பலமாக்கும் முயற்சியில்.,

நல்லாட்சி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் யுத்த வெற்றியினை மட்டும் மகிந்த வசம் இன்றி எடுக்கவோ அகற்றவோ முடிய வில்லை.

மகிந்த தரப்பிற்கு இப்போது உள்ள ஒரே துருப்புச்சீட்டு யுத்த வெற்றி மட்டுமே. அதனை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் புகுத்தும் செயற்பாடுகளையே செய்து வருகின்றார்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இன்று வரை விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதற்கு அரசியல் வாதிகள் இடம் கொடுக்கவும் இல்லலை என்பதே உண்மை.

அதனை மறக்க வைக்காமல் அன்றாடம் மீண்டும் புலிகள் வருவார்கள் என்ற அச்சம் மக்களிடையே பரப்பப்பட்டு கொண்டே வருகின்றது. அதனை சரியாக கையாளுகின்றது மகிந்த அணி என்றே கூறப்படுகின்றது.

ஆட்சியை பிடிக்க இப்போது மகிந்தவிடம் உள்ள பலம் யுத்த வெற்றி. அது மகிந்த வசம் இருக்கும் வரையில் மகிந்தவை மக்கள் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.

அது இருக்கும் வரை மகிந்தவின் ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி பார்க்கும் போது மகிந்தவின் பிரதான பலம் நல்லாட்சியின் பிரதான பலவீனம் இரண்டுமே இது மட்டுமே.

அந்த வகையில் மக்களை திசை திருப்ப தம் பக்கம் சேர்க்க கூட்டங்கள் மூலம் மகிந்த அணி புலிகளை அழித்த கதையை நினைவு படுத்திக் கொண்டு வருகின்றது.

இவ்வாறாக நாடு முழுதும் செய்யப்படும் மகிந்தவின் பிரச்சாரங்கள் மக்கள் மனதை மாற்றமடைய வைக்கக் கூடும். இதனை எப்படி அரசு கையாளப்போகின்றது என்பது கேள்விக்குறியே.

புலிகள் என்பது மக்களுக்கு புளித்துப் போன விடயமாக இருந்தாலும் கூட அந்த அச்சம் இன்று வரை மக்கள் மத்தியில் முற்றாக நீங்கவில்லை. இதற்கு அரசியல் வாதிகளும் ஒரு காரணம்.

இதனை நன்றாக அறிந்து கொண்டு மகிந்த ஆட்சியை பிடிக்க புலிகளை முன்னிறுத்தி சரியான காய் நகர்த்தல்களைச் செய்து வருதாக தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இவை எவ்வாறான தீர்ப்புகளை மாற்றங்களைத் தரும் என்பது மட்டும் இது வரையில் வெளிப்படையில்லாத விடயமே

Allgemein