பிரிக்கப்படாத இலங்கையில் நல்லிணக்கம் வேண்டும் என்கிறார் சம்பந்தன்
(பதுளை, தியத்தலாவை நிருபர்கள்)
அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயன் அடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை அமைப்பது குறித்து முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மலையகத்தில் அமைப்புகள் அனைத் தும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் மலையக மக்களின் தேவைகள், விருப்பங் கள், அபிலாஷைகள் ஆகியவற்றினை நிவர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலமே மலையக மக்கள் வாழ்வில் ஆரோக்கிய மானதோர் சூழலை அனுபவிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது பூர்த்தி விழா நேற்று பண்டாரவளை ஆர்.சி பெரியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில்
“ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளில் பாடரீதியான பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் வடக்கு கிழக்கிலும் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். அவ்வேளையில் குறிப்பிடத்தக்க பட்டதாரிகள் இப்பகுதிக்கும் அனுப்பக் கூடியதாக இருக்கும்.
பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழல் ஏற்பட வேண்டும். நாட்டின் நலன் கருதியும், நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும், சுபீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் உருவாக்கப்படும் அரசியல் சாசனம் அமைய வேண்டும். அந்த அரசியல் சாசனம் உருவாவதற்கு மலையகத்தைச் சார்ந்த சிறுபான்மை அமைப்புகளும் வடக்கு கிழக்கு அமைப்புகளும் பூரண பங்களிப்பை வழங்க வேண்டும்.
1988 ஆம் ஆண்டு 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயன் அடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்து முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும்.
பிரச்சினைகள், வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எமது பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். ஜனாதிபதியும் பிரதமரும் இந் நாட்டில் தத்தமது கட்சியினரை முறையாக வழிநடத்துவார்கள் என்று நம்புகின்றேன். அவர்கள் சிறப்பான முறையில் கட்சியை வழிநடத்தினார்களேயானால் நிலையான நல்லாட்சி ஏற்பட்டு சமத்துவமும் மலரும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திய வம்சாவளி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர். அவர்களின் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. காலப்போக்கில் அம்மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்ததினால் இழக்கப்பட்ட உரிமைகள் படிப்படியாகக் கிடைக்கப்பெற்றன. தற்போது அம் மக்கள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலைமையைக் காணமுடிகின்றது.
வடக்கு கிழக்கிலும் எமது மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டங்களுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்.
பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் செயற்பாடுகள் பாராட்டக்கூடியதாக உள்ளன. இம் மன்றத்தின் வளர்ச்சிக்கு எம்மாலான உதவிகளையும் பங்களிப்புகளையும் வழங்க தயாராகவுள்ளோம்” என்றா