தலைவர் பிரபாகரன் காலத்தில் தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் : சிறீதரன் எம்.பி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

விழுதுகள் நிறுவனத்தினரால் இன்று நடாத்தப்பட்ட “செங்கோலோச்ச விழையும் பெண்களுக்கோர் பாராட்டுவிழா”வில் விருந்தினராக கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது தமிழினத்தின் அரசியல் வரலாற்றில் பெண்களுக்கு தனியான ஒரு இடம் இருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சிலர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள், பலர் தோல்வியுற்று இருக்கிறார்கள். ஆனால் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் பெண்கள் பல்பரிமாணத்துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்தார்கள்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் எமது பெண்களே. அதற்குப் பின்னர் பெண்கள் அரசியலில் ஈடுபடவே அஞ்சினார்கள்.

கடந்த முறை நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலிலும் பெண்களை பங்கு கொள்ள முயற்சித்தோம். யாரும் முன் வரவில்லை. தற்போது அரசியலில் ஈடுபட பெண்கள் எத்தணிப்பது மிகவும் ஆரோக்கியமானது.

எங்களுடைய கட்சியிலும் பெண்கள் அணி உண்டு நூற்றுக் கணக்கானவர்கள் அதில் அங்கத்தவராக உள்ளார்கள். நாங்கள் 25 வீதம் என்று இல்லாது அதிலும் அதிகமாக பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.

ஆனால் எங்களுடைய கட்சி சாதாரண கட்சியல்ல அது விடுதலைக்கான பயணத்தில் ஈடுபட்டு இருக்கின்ற கொள்கை இலட்சியம் என்பவற்றை வென்றெடுப்பதற்கான அரசியல் இயக்கம்.

2009வரை விடுதலைப்புலிகள் சுமந்த பணிகளை எங்களுடைய கட்சி இலட்சியம் வெல்லும் வரை ஜனநாயகப் பாதையில் போராடும்.

நீங்களும் எங்களுடைய கட்சியல் இணைந்து கொள்ளுங்கள். வரலாற்றில் அரசியலில் ஈடுபட்டிருந்த பெண் தலைவர்களால் எத்தனை பெண்களை மேலதிகமாக அரசியலுக்கு கொண்டுவர முடிந்தது.

ஆனால் தலைவர் பிரபாகரனால் பெண்களை அரசியல், படையியல் செயற்பாடுகள் என சகலதுறைகளிலும் வளப்படுத்திக் கொண்டார் என மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein